மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ஓட்டெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்!

ஓட்டெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள்!

ஸ்லீப்பர் செல்கள் யாரென்று வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைந்து சசிகலா, தினகரனை நீக்கிய பிறகு, தினகரன் தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார். எடப்பாடி அணியில் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும், நேரம் வரும்போது அவர்கள் வெளிவருவார்கள் என்றும் தெரிவித்துவருகிறார்.

சிறையிலிருந்து தற்போது பரோலில் சசிகலா வெளிவந்துள்ள நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வருவதற்குப் பாடுபட்டவர் மாண்புமிகு சின்னம்மா” என்றுதெரிவித்திருந்தார். செல்லூர் ராஜுவின் பேச்சையடுத்து, “ஸ்லீப்பர் செல்கள் வெளிவரத் துவங்கியுள்ளனர்” என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

“செல்லூர் ராஜு மனசாட்சி உள்ளவர்” என்று தினகரன் இன்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக செல்லூர் ராஜு, தான் சசிகலா பற்றி கூறியது தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும், தான் ஸ்லீப்பர் செல் இல்லை எனவும் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில் திருச்சியில் இன்று (அக்டோபர் 9) மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “செல்லூர் ராஜு எங்கள் அணியின் ஸ்லீப்பர் செல் என்று நான் கூறவில்லை.ஸ்லீப்பர் செல்களை யாரென்று வெளிப்படையாகக் கூற முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் வெளிவருவார்கள். நடராஜனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து தேவையென்றால் விசாரணை நடத்திக்கொள்ளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon