மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

தேசிய தபால் வாரம்: புதிய சேவை துவக்கம்!

தேசிய தபால் வாரம்: புதிய சேவை துவக்கம்!

உலக தபால் தினத்தை நினைவுகூரும் விதமாக இந்தியாவில் தேசியத் தபால் வாரம் இன்று (அக்.09) தொடங்கியுள்ளது.

உலக தபால் தினம் இன்று (அக்.9) கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியா முழுவதும் இன்று முதல் அக்.15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இண்டர்நேஷனல் டிராக்ட் பேக்கெட் என்ற புதிய சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியத் தகவல் தொடர்பு இணையமைச்சர் மனோஜ் சின்ஹா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், வங்கிச் சேவை, பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவது, ஆதார் பதிவு செய்வது என இந்தியத் தபால் துறை பெரிய பரிமாணத்தை அடைந்துவருகிறது. தற்போதுவரை 57 தபால் நிலையங்கள் பாஸ்போர்ட் சேவையை வழங்கிவருகின்றன. வருங்காலத்தில் கூடுதலாக 93 தபால் நிலையங்களிலும் இது விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவையின்படி, 2 கிலோ எடையுள்ள பொருட்களைக் கப்பல் மூலமாகக் குறைந்த கட்டணத்தில் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு அனுப்பலாம். இ.காமர்ஸ் துறைக்கு இது பெரிதும் பயன்படும் என்றபோதிலும் பொதுமக்களும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம், வேகமான சேவை என்பதுடன் நாம் அனுப்பிய பொருட்கள் தற்போது எங்குள்ளன, எவ்வளவு நேரத்தில் சென்றடையும் போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. பொருட்கள் தொலைந்துபோனாலோ, சேதமடைந்தாலோ நிவாரணம் வழங்கப்படும். முதல் கட்டமாக, ஆஸ்திரேலியா, கம்போடியா, ஹாங்காங், இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பலாம்.

நாளை (அக். 10) சேமிப்பு வங்கி தினமாக கொண்டாடப்படுவதால், புதிய கணக்குகள் துவங்க அனைத்துத் தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11ஆம் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமியத் தபால் ஆயுள் காப்பீடு முகாம்கள் நடைபெற உள்ளன.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon