மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

பாலிவுட் செல்லும் ஜிகர்தண்டா!

பாலிவுட் செல்லும் ஜிகர்தண்டா!

சித்தார்த் – லட்சுமி மேனன் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது தற்போது பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது.

சித்தார்த்துக்கு எதிராக மிரட்டலான வில்லன் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். ‘அசால்ட் சேது’ என்ற பெயரில் கேங்ஸ்டராக வலம் வந்த பாபி சிம்ஹாவின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டதுடன், தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. பாலிவுட்டில் தயாராகவுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா கேரக்டரில் சஞ்சய் தத்தும், சித்தார்த் கேரக்டரில் ஃபர்ஹான் அக்தரும் நடிக்க இருக்கிறார்கள். நிஷிகாந்த் கமத் இயக்கவிருக்கும் இப்படத்தை அஜய் தேவ்கான் அபினவ் சுக்லாவுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இது குறித்து Mumbai Mirror-க்கு அக்தர் பேட்டி அளித்துள்ளார். "இயக்குநர் நிஷிகாந்தை சந்தித்தபோது ரீமேக்காக உள்ள புதிய படம் குறித்து பேசினார். ஆக்‌ஷன் காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் என்னுடைய கேரக்டர் குறித்தும் விவரித்தார். அஜய் தேவ்கன் நடிப்பில் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் படம் பாலிவுட்டில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில் ஹிட்டான ஜிகர்தண்டாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் பணிபுரியவுள்ள இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon