மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

குறையும் ரயில் கட்டணம்!

குறையும் ரயில் கட்டணம்!

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவின்போது வசூலிக்கப்படும் வணிகர் தள்ளுபடி விலையை (MDR) திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்து வருகிறது. இதன் மூலம், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்குக் கட்டணம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்டிசிடி இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு வணிகர் தள்ளுபடி விலைக் கட்டணம் பொருந்தும். டெபிட் / கிரெடிட் கார்டு சேவைகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இந்தக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ரயில்வே அமைச்சர் தெரிவித்தபடி, இந்த எம்.டி.ஆர்., பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன்30 ஆம் தேதியுடன் முடிய இருந்த சேவைக் கட்டண ரத்து செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதனை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ. 20 முதல் 40 வரை சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவையை அளிப்பதற்காக வங்கிகள் பெறும் கட்டணத்தைத் திரும்பப் பெற மத்திய அரசு பரீசிலனை செய்துவருகிறது. இதனால், ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் தானாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., வருவாயில் சுமார் 33% ஆன்லைன் முன்பதிவுகளிலிருந்து வரும் சேவைக் கட்டணமாகும். கடந்த நிதியாண்டின் வருவாயின் படி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் மொத்த வருவாய் ரூ.1,500 கோடியில் ரூ. 540 கோடி டிக்கெட் முன்பதிவுகள் மூலம் வந்தது என மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon