மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகள் : அன்புமணி

கொள்ளையடிக்கும் சுங்கச்சாவடிகள் : அன்புமணி

சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்துக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று(அக்டோபர் 09) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருள்கள் மற்றும் சேவை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் சரக்குந்துகள் போக்குவரத்து இன்றும் நாளையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தீப ஒளித் திருநாள் நேரத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவது வணிகத்தை கடுமையாகப் பாதிக்கும். இந்தப் போராட்டத்தைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பதற்குப் பதிலாக, மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் அதிகார அத்துமீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும், சரக்குந்தை விற்கும்போதும் வாங்கும்போதும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே, சரக்குந்து உரிமையாளர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால், இந்தியா முழுவதும் 93 லட்சம் சரக்குந்துகள் இன்று முதல் ஓடவில்லை.

தமிழ்நாட்டில் 4.50 லட்சம் சரக்குந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நாளை வரை இந்த வேலைநிறுத்தம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தால், தினமும் ரூ.5 ஆயிரம் கோடி வணிகம் பாதிக்கப்படும். தீப ஒளித் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சரக்குந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டிருப்பதால், தீப ஒளித் திருநாளுக்குத் தேவையான ஆடைகள், உணவுப் பொருள்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுசெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், வணிக இழப்பு, விலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

தீப ஒளித் திருநாள் நேரத்தில் சரக்குந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள்தான் அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், இந்தப் போராட்டத்தைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள்குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இரண்டு நாள்கள் மட்டுமே வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அரசு கருதுவதாகவும், அதனால்தான் பேச்சு நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமான அணுகுமுறை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள், 'சுங்கக்கட்டணம்' என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கின்றன. பல சுங்கச்சாவடிகள், அவற்றிற்காக செய்யப்பட்ட முதலீட்டை எடுத்த பிறகும் முழுமையான சுங்கக்கட்டணத்தை வசூலிக்கின்றன. அதேபோல, தினமும் எரிபொருள் விலையை மாற்றியமைப்பது குழப்பங்களை ஏற்படுத்தும். ஒரு சரக்குந்தை முதல் முறை வாங்கும்போது, அதற்கு 28 சதவிகித வரி செலுத்துவது நியாயமானதுதான். ஆனால், ஒவ்வொருமுறை அதை விற்கும்போதும் வாங்கும்போதும் வரி செலுத்துவது என்பது பகல் கொள்ளையாக அமையும். சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவர்களுடன் பேச்சு நடத்தி, போராட்டத்துக்கு முடிவுகட்ட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon