மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

தகுதிநீக்க வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

தகுதிநீக்க வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 09) விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்த வழக்கு நவம்பர் 02ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்த 18 எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்குடன் இணைத்து, அந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவருகிறது.

வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றபோது, தினகரன் தரப்பில் ’தகுதிநீக்கம் தொடர்பாக எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை. அதுதொடர்பான உத்தரவையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே, அதைத் தபால்மூலம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

கட்சி சாராமல் செயல்படவேண்டிய சபாநாயகர், முதலமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்ததாலேயே, எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ததாக சபாநாயகர் தனபால் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில், தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி-யும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும், தற்போது வாதம் செய்து வருகிறார்கள் . அதேபோல், திமுக சார்பில் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகியுள்ளார்.

தற்போது நடைபெற்ற இந்த விசாரணையில், தகுதி நீக்க வழக்கில் கூடுதல் மனுவை திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். ஆனால், கூடுதல் மனுக்களுக்கு முதலமைச்சர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 02 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், நவம்பர் 02 ஆம் தேதிக்குள் ஆவணங்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகளை முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சபாநாயகர், முதல்வர் தரப்பினர் அக்டோபர் 23 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon