மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

310 தொலை தூர கல்வி நிலையங்கள் மூடல்!

310 தொலை தூர கல்வி நிலையங்கள் மூடல்!

வெளி மாநிலங்களில் செயல்படும் 310 தொலை தூர கல்வி நிலையங்கள் மூடப்படும் என நேற்று முன்தினம் (அக்டோபர் 7) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் டாக்டர் ஏ. கணபதி, “மத்திய அரசின் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' சார்பில் (institutes of eminence) சிறந்த முறையில் செயல்படும் பல்கலைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், பாரதியார் பல்கலைக்கழகம் நிதியுதவி பெறும் தகுதியைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தில், பதிவுக் கட்டணமாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அந்நிறுவனம், பாரதியார் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து விட்டால் ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் வழங்கும். இதன் மூலம் உள் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்கலை தேவைகளை மேம்படுத்த முடியும். இங்குள்ள கல்லூரி ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று, சிறப்பு பயிற்சி பெறலாம். மேலும், வெளிநாடுகளில் இருந்து நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்களை வரவழைத்து, கல்வி கற்பிக்க செய்யலாம். தற்போது பல்கலையில் 150 கோடி ரூபாய் அளவுக்கு, ஓய்வூதிய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஓய்வூதிய பண பலன் சார்ந்த பிரச்சினை இருக்காது.

2015 ஆம் ஆண்டு வரை, பலகலை மானிய குழுவான யூஜிசி அங்கீகாரத்துடன் தொலை தூர கல்வியை நடத்தி வருகிறோம். எனினும், உயர்கல்வி துறை அமைச்சரின் ஆலோசனைப்படி, வெளி மாநிலங்களில் செயல்படும், 310 தொலை தூர கல்வி நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்குள் செயல்படும் 150 தொலை தூர கல்வி நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon