மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ஸ்லீப்பர் செல் நானா?: கண்கலங்கிய செல்லூர் ராஜு

ஸ்லீப்பர் செல் நானா?: கண்கலங்கிய  செல்லூர் ராஜு

சசிகலா குறித்துத் தான் கூறிய வார்த்தை பெரிதுபடுத்தப்பட்டு விட்டதாகவும் , தான் ஸ்லீப்பர் செல் இல்லை எனவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைந்த பிறகு தினகரன் தனி அணியாகச் செயல்பட்டுவரும் நிலையில், அமைச்சர்கள் சசிகலா குடும்பத்தை இனி கட்சிக்குள் சேர்க்க மாட்டோம் என்று கூறிவருகின்றனர். ஆனாலும் தம்பிதுரை, ஒ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள். சசிகலா சிறையிலிருந்து பரோலில் வந்துள்ள நிலையில்,நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “ஜெயலலிதாவின் ஆட்சி அமையச் சிறப்பாகப் பாடுபட்டவர் மாண்புமிகு சின்னம்மா " என்று தெரிவித்திருந்தார். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், “அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவதையே காட்டுகிறது" என்றார். தினகரன், “மனசாட்சி உள்ளவர் அமைச்சர் செல்லூர் ராஜு” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் திருச்சியில் இன்று ( அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “தமிழ்நாட்டில் டெங்கு கொசுவைவிட ஒழிக்கப்பட வேண்டியது திமுகதான். நான் ஸ்லீப்பர் செல் இல்லை. ஒவ்வொருவனுக்கும் ஒரு மனசாட்சி உள்ளது. அதன்படிதான் நான் கூறினேன். ஆனால் சசிகலா குறித்து நான் கூறிய கருத்து பெரிதாக்கப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய தொண்டர்களில் நானும் ஒருவன். எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். 2021இல் மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்பதே எங்களுடைய லட்சியம்” என்று சொன்ன செல்லூர் ராஜு, பேசிக்கொண்டிருந்தபோதே நா தடுமாறிக் கண் கலங்கினார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon