மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ரஜினி - கமல் ஜிஎஸ்டி குறித்து பேசவேண்டும்!

ரஜினி - கமல் ஜிஎஸ்டி குறித்து பேசவேண்டும்!

ஜிஎஸ்டி வரி குறித்து பிரதமரிடம் ரஜினி மற்றும் கமல் பேச வேண்டும் என்று 'ப்ரேமம்' படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சமீபத்தில் புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதில் சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கிறது. இதற்கு திரையுலகினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி அட்டவணையில் சூதாட்டத்தோடு திரைத்துறையை சேர்த்திருப்பது குறித்து தனது எதிர்ப்பை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அந்த பதிவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்துக்கு என் சந்தேகங்கள் என்று சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவையாவன:

1 . ஏன் ஜிஎஸ்டியில், சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருக்கின்றன?

2 . எப்படி சினிமாவும் சூதாட்டமும் ஒன்றாகும்?

3 . தாயக்கட்டை உருட்டினால் சினிமா வந்துவிடுமா? அல்லது மூணு சீட்டு, போக்கர் போன்ற சீட்டாட்டம் விளையாடினால் சினிமா எடுத்துவிட முடியுமா?

4 . தாயம் உருட்டவும், சீட்டுகளை குலுக்கவும் எடுத்துக்கொள்ளும் நேரமும், முயற்சியும், ஒரு திரைப்படம் எடுப்பதற்காக செலவிடப்படும் நேரமும் முயற்சியும் ஒன்றாகிவிடுமா? என்று கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மேலும், அவர்,"தமிழ் சினிமா துறையில் நீங்கள்தான்(ரஜினி, கமல்) அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகள். பிரதமர் நரேந்திர மோடியிடம், பட்ஜெட்டில் இருக்கும் இந்த சிறிய தவறைப் பற்றி பேச வேண்டும் என மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இது பற்றிய உங்களுடைய பேச்சுவார்த்தை மொத்த திரைத்துறையையும், ரசிகர்களையும் காப்பாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon