மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

லாரிகள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்!

லாரிகள்  இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்!

ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் லாரிகள் வேலை நிறுத்தம் நடக்கிறது. இதனால் சரக்கு மற்றும் மணல் லாரிகள் உள்பட 93 லட்சம் லாரிகள் இன்றும் நாளையும் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகள் சேர வேண்டிய இடத்தைச் சேராமல் ஆங்காங்கே தேங்கும். இதன் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்கள் முன் வைத்துப் போராடும் கோரிக்கைகள் என்னென்னவென்று இப்போது பார்க்கலாம்.

1. நாடு முழுவதும் செயல்படும் 327 சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும்.

2. ஆர்டிஓக்கள் லாரிகளை காரணமே இல்லாமல் நிறுத்தி அபராதம் வசூலிக்கக் கூடாது.

3. டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும்.

4. லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பைக் கைவிட வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். ஆனால் இதற்குப் பலன் ஏதும் கிட்டவில்லை. இந்நிலையில்தான் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் 9.10.2017 நாளையும் 10.10.2017 நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை 4.5 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக 75 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் நாளைய வேலை நிறுத்தத்தில் கால் டாக்ஸிகளும் பங்கு பெறும் என்று கால்டாக்ஸி உரிமையாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவோம். இன்று காலை 6 மணி முதல் லாரிகள் இயக்கப்படாது. வெளி மாநிலத்துக்கு லோடுகளை ஏற்றிச் செல்லமாட்டோம். ஜிஎஸ்டி வரி விதிப்பால் லாரி போக்குவரத்து தொழில் கடந்த 3 மாதமாக முடங்கியுள்ளது. மத்திய அரசு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும். தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் சரக்கு லாரிகள் 2 நாட்கள் இயக்கப்படாது. மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டமும் நடைபெறும். இவ்வாறு தன்ராஜ் கூறினார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon