மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கால்பந்து: நியூ கேல்டோனியாவை பந்தாடிய பிரான்ஸ்!

கால்பந்து: நியூ கேல்டோனியாவை பந்தாடிய பிரான்ஸ்!

ஜூனியர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி, நியூ கேல்டோனியா அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்று (அக்டோபர் 8) நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும், நியூ கேல்டோனியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. 5வது நிமிடத்தில் நியூ கேல்டோனியா வீரர் பெர்னாட் ஐவா `சேம் சைடு கோல்' அடிக்க, பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து 20வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அமைன் கோவ்ரே மற்றொரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெறச் செய்தார். பிரான்ஸ் அணிக்கு 30வது நிமிடத்தில் கிளாடியோவும், 33வது நிமிடத்தில் கோவ்ரேவும் , 40வது நிமிடத்தில் மேக்ஸ்ஸன்ஸ் கோலடிக்க 5-0 என முன்னிலையை எட்டியது. இந்நிலையில் நியூ கேல்டோனியாவின் கியாம் வேனெஸ்ஸி 43வது நிமிடத்தில் `சேம் சைடு கோல்' அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் நியூ கேல்டோனியாவின் வெடின்ஜெஸ், தனது அணிக்கு முதல் கோலை பெற்றுத் தந்தார். அதன் பின்னர் பிரான்ஸ் அணிக்கு, இஸிடோர் பதில் கோல் அடித்தார். கடைசியில் பிரான்ஸ் அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தும் அணியும், சிலி அணியும் மோதின. இந்த போட்டியில் 5வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஹட்சன் ஓடோய் முதல் கோலை அடித்தார். இதன்பிறகு முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் 51 மற்றும் 60வது நிமிடங்களில் இங்கிலாந்து வீரர் சான்கோ கோலடிக்க, அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு 81வது நிமிடத்தில் ஹோம்ஸ் கோலடிக்க, இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை தோற்கடித்தது.

யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டங்கள்:

கானா - அமெரிக்கா (மாலை 5 மணி)

துருக்கி - மாலி (மாலை 5 மணி)

பராகுவே - நியூசிலாந்து (இரவு 8 மணி)

இந்தியா - கொலம்பியா (இரவு 8 மணி)

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon