மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

கோத்ரா ரயில் எரிப்பு: உயர் நீதிமன்ற தீர்ப்பு!

கோத்ரா ரயில் எரிப்பு: உயர் நீதிமன்ற தீர்ப்பு!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 9) தீர்ப்பு வழங்கியுள்ளது

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில் கோத்ரா ரயில் நிலையத்தின் அருகே வந்த போது ரயிலின் எஸ்.6 பெட்டியை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். இதில், அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த 14 குழந்தைகள் உட்பட 59 கரசேவகர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, எரிந்த ரயில்ப் பெட்டிகள் கழற்றி விடப்பட்டது. பின்னர், வதோதாரவிற்கு சென்றடைந்தது. அங்குக் கூடி இருந்த வன்முறையாளர்கள், ரயிலில் வந்திறங்கிய ஒருவரைக் கொன்றுவிட்டு, மற்றவர்களைக் கட்டையால் தாக்கினர்.

ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக 1,500 பேர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தால் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 31 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வீடுகள், கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டதுடன், பலர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர், பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், பலர் காணாமல் போயினர்.

2004 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான அமைச்சரவை, இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பானர்ஜி தலைமையில் குழு அமைத்தது.

2005ஆம் ஆண்டு நீதிபதி பானர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என அறிக்கை தாக்கல் செய்தது.

2006ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி பானர்ஜி தலைமையிலான குழு செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்தது.

2008ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி ரயில் எரிப்பு மற்றும் கலவரம் தொடர்பான வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு, முஸ்லிம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு ரயில் பெட்டிக்குள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது.

அதைத் தொடர்ந்து ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக 134 பேர் கைது செய்யப்பட்டனர். 94 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், போதிய சாட்சிகள் இல்லை எனக் குற்றம்சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மௌலானா உமர்ஜி, கோத்ரா நகராட்சித் தலைவர் முகமது உசைன் கலோட்டா, முஹமது அன்சாரி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் கங்காபூரைச் சேர்ந்த நானுமியா சௌதாரியும் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 31 பேரைக் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. அதில் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தண்டனைப் பெற்றவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதேப் போன்று மாநில அரசின் சார்பிலும் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “ குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளதால், குற்றவாளிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 11 பேருக்கு அளித்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. மாநில அரசு சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க தவறியதாலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. ரயில் எரிக்கப்பட்ட போது அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் மாநில அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon