மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ரயில்வேயில் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு!

ரயில்வேயில் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவு!

ரயில்வே துறையில் நிலவும் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் விதமான அறிவிப்பாணையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் வேளையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று, விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது.

இது தொடர்பாக கடந்த செப்.28ம் தேதி ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரயில்வே வாரிய தலைவரோ, அதன் உறுப்பினர்களோ வரும்போது அவர்களை வரவேற்க ரயில்வே பொது மேலாளர் நேரில் வர வேண்டும் என்ற 36 ஆண்டுக் கால நடைமுறை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலைப் பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணி புரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வீடுகளில் 30 ஆயிரம் கடைநிலை ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இனி ரயில்வேப் பணிகளில் மட்டுமே அவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் தலைவர் அஷ்வானி லொஹானி கூறும்போது, பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசுப் பொருட்களையும் பெறக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போதும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோல், ரயில்வே துறை உயர் அதிகாரிகள், ரயிலில் உயர் வகுப்பில் பயணம் செய்ய வேண்டாம் என்றும், சாதாரண வகுப்பில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்யுமாறும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon