மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

போயஸ் கார்டன் : தீபா வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்!

போயஸ் கார்டன் : தீபா வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்!

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கத் தடை கேட்டு தீபா தொடர்ந்த வழக்கில், வரும் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதா அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும், தங்களின் முடிவைக் கேட்காமல் வேதா இல்லத்தை நினைவிடமாக்க கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கிடைய போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க தடை கேட்டு தீபா சார்பில் கடந்த 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்,' அரசு தரப்பிலிருந்து போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர், தலைமை செயலாளருக்கு நான் அனுப்பிய கடிதமும் பரிசீலிக்கப்படவில்லை. ஜெயலலிதா உயில் ஏதும் எழுதிவைக்காத நிலையில், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் நானும், தீபக்கும்தான், எனவே போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று( அக்டோபர் 9) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,"போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவது தொடர்பாக தலைமை செயலாளரும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகியவைகளும் வரும் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon