மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

ப்ரோ கபடி : முதலிடத்தைத் தக்கவைத்தது குஜராத்!

ப்ரோ கபடி : முதலிடத்தைத் தக்கவைத்தது குஜராத்!

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று (அக்டோபர் 8) நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியைத் தோற்கடித்து, `ஏ' பிரிவில் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

ப்ரோ கபடி தொடரின் 115வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று (அக்.8) நடைபெற்றது. இதில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே குஜராத் அணியின் டேக்கில் சிறப்பாக இருந்ததால், பாட்னாவின் முன்னணி ரைடர்களான பிரதீப் நர்வால், மானு கோயத் ஆகியோர் தொடர்ச்சியாக வெளியேறினர். முதல் 15 நிமிடங்களில் பாட்னா அணியின் கேப்டன் பிரதீப் நர்வால் ஒரு போனஸ் புள்ளியும், மானு கோயத் இரு புள்ளிகளை மட்டுமே பெற்றனர். தொடர்ந்து அபாரமாக ஆடிய குஜராத் அணி, 12வது நிமிடத்தில் பாட்னாவை ஆல் அவுட் செய்ததால் 13-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் குஜராத் அணி, 18-12 என முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் மானு கோயத் இரண்டு புள்ளிகளைக் கைப்பற்றினார். 24வது நிமிடத்தில் குஜராத் அணி, சூப்பர் டேக்கிள் மூலம் இரு புள்ளிகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து குஜராத் அணி, சிறப்பான ரைடுகளால் மூன்று புள்ளிகளைக் பெற்று, ஆல் அவுட் ஆவதிருந்து தப்பித்து, 24-17 முன்னிலையைத் தக்கவைத்தது. 28வது நிமிடத்தில் பாட்னா கேப்டன் பிரதீப் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, குஜராத் முதல் முறையாக ஆல் அவுட்டானது. இருப்பினும் பாட்னா அணி, 22-24 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. கடைசி நிமிடங்களில் சிறப்பாக ஆடிய குஜராத் அணி, நான்கு புள்ளிகளைக் கைப்பற்றியது. இறுதியில் குஜராத் அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடிய குஜராத் அணி, 13வது வெற்றியைப் பெற்று 77 புள்ளிகளுடன் `ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. தனது 6வது தோல்வியைச் சந்தித்துள்ள பாட்னா 67 புள்ளிகளுடன் `பி' பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.

இதன் மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 38-30 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. புனே அணியின் ராஜேஷ் மொண்டால் அதிகபட்சமாக 9 புள்ளிகள் எடுத்தார்.

இன்று (அக்டோபர் 9) ஓய்வு தினம் எனவே போட்டிகள் நடைபெறாது. அக்டோபர் 10 நடைபெறும் லீக் போட்டிகளில் யூ மும்பா - தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon