மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

சோலோவைக் கொன்றுவிடாதீர்கள்!

சோலோவைக் கொன்றுவிடாதீர்கள்!

கெஞ்சிக் கேட்கிறேன், ‘சோலோ'வைக் கொன்றுவிடாதீர்கள் என்று துல்கர் சல்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சோலோ'. அக்டோபர் 5ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படக் குழுவினர் படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள துல்கர் இயக்குநர் நினைத்த வடிவத்துக்கு மாறாகக் காட்சியை வெட்டி மாற்றுபவர்கள் படத்தை சாகடிப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கதை பற்றி எழுந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக, “இந்த பூமியில் 7 பில்லியன் மக்கள் இருக்கின்றனர். அவ்வளவு கதைகளும் இருக்கின்றன. அவ்வளவு பிரச்சினைகளும் இருக்கின்றன. அவ்வளவு வித்தியாசங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. உங்களுக்கு அது தெரியாதென்பதால் அது இல்லாமல் போய்விடாது. அப்படி நினைத்தால் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள், முன்தீர்மானத்தோடு இருக்கிறீர்கள், அல்லது இரண்டும் என்று அர்த்தம். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே. ஏன் இந்த முன் தீர்மானம்?” என்று கூறியுள்ளார்.

மேலும் படத்தின் முக்கியமான காட்சி ஒன்று ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் போனது. அது பார்வையாளர்களின் புரிதலில் உள்ள பிரச்சினை என்று குறிப்பிடுகிறார் துல்கர். “சோலோ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ருத்ராவின் கதையைப் பற்றி சிலர் கிண்டல் செய்து பேசும்போது என் மனம் உடைகிறது. நடிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் நடித்த கதை அது. நாசர் அவர்களோ, ஹாசினி அவர்களோ, நேஹாவோ, நானோ, அது மிகவும் தனித்தன்மையுடனும், தைரியமாகவும் இருப்பதாக நினைத்தோம்.

அது எதிர்பாராதவிதமாக நகைச்சுவையாக மாறிவிட்டது எனச் சிலர் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹாசினி அவர்களின் கதாபாத்திரம், அச்சத்துடனும், தர்மசங்கடத்துடனும் ருத்ரா கதாபாத்திரத்திடம் அந்த உண்மையை உடைக்கும் காட்சியில், அவர்களின் நடிப்பு அற்புதம். அது என் வாழ்க்கையில் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று. அது ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டது. நான் சரி என்று நினைத்த வகையில் அதைப் புரிந்துகொண்டேன். என்னைப் போன்ற ஒரு நடிகனுக்கு அது புதிது. இதுவரை எந்தக் காட்சியையும் ரசிக்காத அளவுக்கு அதை நான் ரசித்தேன்.

பிஜாய் கட் சொல்லும்போது, டப்பிங்கில் பேசும்போது, நான் திரையில் பார்க்கும்போது நகைச்சுவையாகத்தான் இருந்தது. கதாபாத்திரங்களின் பார்வையில் அது நகைச்சுவை அல்ல. அவர்கள் சோகமாகவும், உடைந்து போயும் இருப்பார்கள். திரையில் அது விநோதமாகவும் இருக்கும். அதிலும் ருத்ரா கதாபாத்திரத்துக்கு. மக்கள் எங்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்களா, எங்களைப் பார்த்து சிரிக்கிறார்களா என்பது புரியவில்லை. டார்க் காமெடி வகை அப்படித்தான் விநோதமாக இருக்கும். எப்போதும் அப்படித்தான். அதுதான் எங்கள் நோக்கமும் கூட. உங்களுக்கு அது புரியவில்லை என்பதால், அதை நக்கலடித்து, தியேட்டரில் கூச்சல் போட்டு, எதிர்மறையான எண்ணங்களைப் பரப்பி, படத்தை வெறுத்து தரக்குறைவாக பேசுவது படத்தை சாகடிக்கும். எங்கள் மனங்களை உடைக்கும். இவ்வளவு நாள் நீங்கள் தந்துகொண்டிருந்த ஊக்கத்தை, தைரியத்தை உடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon