மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

இந்திய சர்வதேச அறிவியல் விழா!

இந்திய சர்வதேச அறிவியல் விழா!

இந்திய சர்வதேச அறிவியல் விழா சென்னையில் வருகின்ற 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், பப்பாளிப் பழத்திலிருந்து டி.என்.ஏ. பிரித்தெடுக்கும் முயற்சியில், 1,௦௦௦ மாணவர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையிலும், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாகவும் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய புவி அறிவியல் அமைச்சகம், விஞ்ஞான் பாரதி அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. அந்த வகையில், 3ஆவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சென்னையில் அக்டோபர் 13 முதல் 16ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகிய ஐந்து இடங்களில் இந்த விழா நடக்கிறது.

இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேசியப் புதுமையாக்க நிறுவனத்துக்குத் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை அனுப்பியவர்களின் 100 கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன. இதில் பெண் விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 125 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட 29 அறிவியல் சார்ந்த திரைப்படங்களும், இதர 9 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 24 அறிவியல் சார்ந்த திரைப்படங்களும் திரையிடப்படும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சர்வதேச அறிவியல் விழா டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon