மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: அதிர்ஷ்ட தேவதையின் ஆசிபெற்ற ஜெய் அமித் ஷா!

சிறப்புக் கட்டுரை: அதிர்ஷ்ட தேவதையின் ஆசிபெற்ற ஜெய் அமித் ஷா!

ரோஹிணி சிங்

ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டில் (அதே ஆண்டுதான் அமித் ஷாவும் கட்சித் தலைவரானார்) பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவின் மைந்தன் ஜெய் அமித்பாய் ஷா நடத்தும் தொழிலின் ஆண்டு நிகர வருமானமானது முந்தைய ஆண்டை விட 16,000 மடங்கு அதிகரித்தது.

ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனீஸின் பேலன்ஸ் ஷீட்டின்படி மார்ச் 2013, மற்றும் மார்ச் 2014 மாதங்களில் முடிவடைந்த நிதியாண்டுகளில் ஷாவின் ‘டெம்பிள் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் அவ்வளவாகத் தொழில் புரியாமல் முறையே ரூ.6,230/- மற்றும் ரூ.1,724/- நஷ்டமடைந்திருந்தது. 2014-15ஆம் ஆண்டில் ரூ.50,000/- வருவாயில் ரூ.18,728/- லாபம் ஈட்டிய இந்நிறுவனம், 2015-16இல் ஈட்டிய ஆண்டு நிகர லாபம் ரூ.80.5 கோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகளில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினரும் அமித் ஷாவின் சம்பந்தியுமான ராஜேஷ் கண்ட்வாலாவின் நிதி நிறுவனத்திடமிருந்து கடனாக டெம்பிள் என்டர்பிரைசஸுக்கு ரூ.15.78 கோடி கிடைத்ததும் அதன் வருமானம் நம்ப முடியாத அளவு அதிகரித்தது.

ஓராண்டு கழித்து அதாவது அக்டோபர், 2016இல் ஜெய் ஷாவின் நிறுவனம் திடீரென தன் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தது. நிறுவன இயக்குநரின் பெயரில் வெளியான அறிக்கையில் அந்த ஆண்டு ரூ.1.4 கோடி நஷ்டமடைந்ததாலும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் நேரிட்ட நஷ்டத்தாலும் நிறுவனத்தின் நிகர மதிப்பு முழுவதும் சரிந்து விட்டதாகச் சொல்லப்பட்டது.

The Wire இணையதளம் சார்பில் கடந்த வியாழனன்று ஜெய் ஷாவுக்கு கேள்விப் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டது. அவருடைய நிறுவனத்தின் மாறிக்கொண்டிருக்கும் லாப நஷ்டம் பற்றிய கேள்விகள் அதில் இருந்தன. அதற்கு அவரிடமிருந்து உடனடியாகப் பதில் வரவில்லை. அடுத்த நாள் அவரது வழக்கறிஞர் மாணிக் டோக்ரா The Wire இணையதளத்துக்கு அனுப்பிய நோட்டீஸில், ஷாவின் மீது ஏதாவது களங்கம் சுமத்தினாலோ, பேரைக் கெடுத்தாலோ ‘சிவில், கிரிமினல்’ வழக்குகள் தொடரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகெங்கிலும் அரசியல்வாதியின் தொழில் நடவடிக்கைகள் மக்களால் பார்க்கப்பட்டு ஆய்வுக்குள்ளாகின்றன; அதிலும் தொழில் திடீரென உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ இது நடப்பது நிச்சயம். ஐ.மு.கூ. அரசின் இரண்டாவதுகட்ட ஆட்சியின்போது (2009-14) முதல் மூன்றாண்டுகள் வரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாதேராவின் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி நியாயமானது என விளக்குவதிலேயே காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நேரம் செலவானது. இது குறித்து முக்கியமாகக் குற்றம் சாட்டியது பாஜகவினர்தான்.

2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டெம்பிள் என்டர்பிரைசஸில் ஜெய் ஷாவும் ஜிதேந்திர ஷாவும் இயக்குநர்களாக இருந்தனர். அமித் ஷாவின் மனைவி சோனல் ஷாவுக்கும் அதில் பங்கிருந்தது. 2013-14இல் சொத்து / சரக்கு இல்லாததால் வருமான வரித்துறையிடமிருந்து நிறுவனத்துக்கு ரூ.5,796 திரும்பக் கிடைத்தது. 2014-15 நிதியாண்டில் ரூ.50,000-ம் 2015-16இல் ரூ.80.5 கோடியும் மொத்த வருவாய் (16000 சதவிகிதம் அதிக லாபம்) ஈட்டியது. மேலும், ரிசர்வ்களும், சொத்துகளும் வியாபாரமும், குறைந்த காலக் கடன்களும் அதிகரித்தன. அதீத லாபம் ‘பொருள் விற்பதால்’ கிடைத்ததாகக் கூறப்பட்டது. லாபத்தில் அந்நிய வருமானமாகிய ரூ.51 கோடியும் அடங்கும். KIFS-இடம் வாங்கிய (உத்தரவாதமின்றிக் கிடைத்த) கடனாகிய ரூ.15.78 கோடியும் கணக்கிலுள்ளது.

The Wire-ன் கேள்விப் பட்டியலுக்குப் பதிலளிக்க ஒப்புக்கொண்ட ராஜேஷ் கண்ட்வாலா, அதன் பின்னர் தொலைபேசி அழைப்புக்கோ, குறுஞ்செய்திக்கோ பதில் தரவில்லை. அவரது பெண் அகமதாபாத்தைச் சேர்ந்த பரிமள் நத்வானியின் மகனைத் திருமணம் செய்துகொண்டார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் குஜராத் செயல்பாட்டை நிர்வகித்த நத்வானி பாஜக ஆதரவில் மாநிலங்களவையின் சுயேச்சை உறுப்பினர் ஆனவர்.

நத்வானியோ ரிலையன்ஸ் நிறுவனமோ டெம்பிள் என்டர்பிரைசஸுக்குக் கடன் பெற்றுத் தரவில்லை என்று அமித் ஷாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் The Wire இணைய இதழின் நிருபரிடம் தெரிவித்தன. ரமேஷ் குடும்ப நண்பர் என்று ஜெய் ஷாவின் வழக்கறிஞர் கூறினார். “ஜெய் ஷா, ஜிதேந்திர ஷா முதலீட்டில் நிறுவனத்தைத் தொடங்கினர்; கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் வரிபிடித்தம் செய்யப்பட்டுக் கடன் பெறப்பட்டது; கடனையும் வட்டியையும் முழுவதுமாகத் திரும்பச் செலுத்திவிட்டோம்” என்று கடனைப் பற்றி அவர் விளக்கினார்.

ரமேஷுடனான தொழில் தொடர்பு பற்றி விளக்குமாறு ஜெய் ஷாவிடம் கேட்டதற்கு அவரது வழக்கறிஞர், “குறுகிய காலக் கூட்டணியில் இருவரும் இருந்தபோதிலும் சந்தை நிலவரம் சரியில்லாத காரணத்தால் கூட்டணி பிரிந்து விட்டது; இதுபற்றி முறையாக அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன” என்றார். அவர் கூறும் ‘சந்தை நிலவரம் சரியில்லாத’ காலத்தில் நிறுவனம் ரூ.15.78 கோடி கடன் பெற்று பின் ரூ.80.5 கோடி லாபம் ஈட்டியது. பிற கேள்விகளுக்கு வழக்கறிஞர் பதிலளிக்கவில்லை.

மொத்த வியாபாரம் செய்துவந்த டெம்பிள் என்டர்பிரைசஸின் 95% லாபம் விவசாயப் பொருள் விற்பனையில்தான் (பருப்பு, சோயா பீன்ஸ், அரிசி, கோதுமை, மைதா – ஏற்றுமதி / இறக்குமதி) வந்தது. ஜெய் ஷாவும் ஜிதேந்திர ஷாவும் தொழிலை நடத்தி வந்தனர். நிகர லாபம் ரூ.80 கோடி என்பது ‘அசாதாரணமானதல்ல’ என்றும் வழக்கறிஞர் கூறினார். ஒரே ஆண்டில் லாபம் ரூ.50,000-லிருந்து ரூ.80 கோடியாக மாறியதும், அடுத்த ஆண்டு நிறுவனம் இழுத்து மூடப்பட்டதும் அசாதாரணமானவை அல்லவா?

2015இல் தொடங்கப்பட்ட குசும் ஃபின்ஸர்வ் நிறுவனத்தில் ஜெய் ஷா 60% பங்கு வைத்திருந்தார். ஸ்டாக்குகள், பங்கு வர்த்தகம், ஏற்றுமதி / இறக்குமதி மற்றும் மார்க்கெட்டிங், கன்சல்டன்ஸி ஆகியவற்றை இந்நிறுவனம் செய்து வந்தது. கலுப்பூர் வணிகக் கூட்டுறவு வங்கியிடம் ஷா ரூ.25 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்காக அவர் அடமானம் வைத்த சொத்துகளில் தந்தை அமித் ஷாவின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தும் அடங்கும்.

இது தவிர, மத்திய அரசின் ‘மினிரத்னா’ என்றழைக்கபப்டும் IREDA-விடமிருந்து ஷாவின் நிறுவனம் ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தது. பியுஷ் கோயல் அமைச்சராக இருந்தபோது இக்கடன் தரப்பட்டது. “2.1 மெகாவாட் திறன் படைத்த மின்சார ஆலை தொடங்க இக்கடன் பெறப்பட்டது; 30.6.2017இன்படி ரூ.8.52 கோடி இன்னும் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது” என்கிறார் ஷாவின் வழக்கறிஞர். IREDA-வின் கடன் தரும் கொள்கைகள் பற்றி அறிய The Wire அவரைத் தொடர்புகொண்டது; பதில் இன்னும் வரவில்லை.

ஜெய் ஷாவின் தொழில் தொடர்பு பற்றி எவ்விதமான கட்டுரை வெளியிட்டாலும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்நோக்கத் தயாராக இருக்குமாறு அவரது வழக்கறிஞர் எச்சரித்துள்ளார். “ஜெய் ஷாவின் நற்பெயருக்கு / புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்தரங்கத் தகவல்கள் அல்லது தொழில் விவரங்களை வெளியிடத் தேவையில்லை. உங்களது கேள்விப் பட்டியல் அவரது புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகத் தெரிகிறது. இதை மீறி அச்சிலோ மின்னணு (அ) டிஜிட்டல் முறையிலோ அல்லது வேறு விதமாகத் தவறான விவரங்களைப் பரப்பி ஜெய் ஷாவின் அந்தரங்க உரிமையில் தலையிட்டால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்கிறார் இவ்வழக்கறிஞர்.

(புலனாய்வு நிருபராகிய ரோஹிணி சிங் சமீபகாலம் வரை ‘எகனாமிக் டைம்ஸில்’ பணியாற்றி வந்தார். 2011ஆம் ஆண்டில் ராபர்ட் வத்ராவின் தொழில் விவகாரங்களை அம்பலப்படுத்தியவர் இவர்)

நன்றி: Thewire.in

தமிழில்: சுப்ரபாலா

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon