மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஸ்லீப்பர் செல்கள் வெளிவருகின்றனர்!

ஸ்லீப்பர் செல்கள் வெளிவருகின்றனர்!

‘அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு அங்குள்ள ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளிவருகிறார்கள் என்பதையே காட்டுகிறது’ என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டுவரும் நிலையில், ‘இனி ஒருபோதும் கட்சிக்குள் தினகரன், சசிகலா ஆதிக்கத்தை அனுமதிக்க மாட்டோம்’ என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாகவே பேசி வருகின்றனர்.

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ள தனது கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக ஐந்து நாள்கள் நிபந்தனைகளுடன் கூடிய பரோலில் சசிகலா சென்னை வந்துள்ள நிலையில், ‘ஜெயலலிதாவின் ஆட்சி அமைய மாண்புமிகு சின்னம்மா அவர்கள் சிறப்பாக பாடுபட்டுள்ளார்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் நேற்று (அக்டோபர் 8) செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி, “அமைச்சர் செல்லூர் ராஜு, தனக்கு மனசாட்சி உள்ளது என்பதை கூறியுள்ளார். என் மனதுக்குள் சில விஷயங்கள் உள்ளன. ஆனால், தான் பேச முடியாத சூழலில் இருப்பதாகவும், இந்த அரசு அமைய சசிகலா சிறப்பாக பாடுபட்டுள்ளார் என்றும், அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளார். அதைத்தான் நாங்கள் கூறினோம், அங்குள்ள ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளிவருகின்றனர் என்று. மனசாட்சி உள்ளவர்களுக்கு சசிகலாவின் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்தவுடன் உறுத்தாமல் இருக்காது. இந்த அரசை சசிகலாதான் ஏற்படுத்தினார் என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு வரும் இல்லையா. அதனுடைய வெளிப்பாடுதான் தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon