மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 7

மினி தொடர்: ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 7

ஆரா

2017, ஜனவரி 9. மாலை 6.20 மணி. இது என்ன முகூர்த்தம் மாதிரி என்கிறீர்களா? மத்திய அரசின் மின்சாரத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில்தான் இவ்வளவு துல்லியமாக நேரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாடு உதய் திட்டத்தில் இணையும் 21ஆவது மாநிலமாகிறது’ என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் செய்தி அறிக்கை வெளியிட்ட நேரம்தான் ஜனவரி 9 மாலை 6.20 மணி.

‘தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் மேலான முன்னிலையில் உதய் திட்டத்தில் தமிழ்நாடு இணையும் ஒப்பந்தம் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது’ என்றது அப்பத்திரிகை செய்தி. இதன் மூலம் தமிழ்நாடு 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்குப் பயனடையும் என்றும் அந்த செய்திக் குறிப்பு சொன்னது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே டெல்லி வந்து ஒப்புதல் கொடுத்துச் சென்ற தங்கமணி, ஜெயலலிதா டிசம்பர் 2016இல் இறந்துவிட்ட நிலையில், 2017 ஜனவரி மாதம் உதய் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கனெக்ஷன் கொடுத்துவிட்டார்.

ரூ.11 ஆயிரம் கோடி லாபம் என்று அறிவித்த மத்திய அரசின் அறிவிப்பை மறப்பதற்குள் தமிழக அரசு மார்ச் மாதம் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

“தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளில் 10 விழுக்காட்டினருக்கு திறன்மிகு மின்சார மோட்டார்கள் வழங்கப்படும்” என்பதே அந்த அறிவிப்பு. எல்லாம் உதய் செய்யும் மாயம்தான்.

விவசாயிகளுக்குத் திறன்மிகு மின்சார மோட்டார்கள் வழங்கப்படும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏதோ விவசாயிகளுக்கு அள்ளிக்கொடுப்பது மாதிரி இருக்கும். ஆனால், இதன் உள்ளே ஓடுகிறது மின்சாரத்தைவிடவும் அதிர்ச்சி தரத் தக்க சங்கதி.

உதய் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் திறன்மிகு மின்கருவிகளைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும். அதன்படி தமிழகத்தில் உள்ள 20.62 லட்சம் வேளாண் மின் இணைப்புகளில் 10% இணைப்புகளை, அதாவது 2.06 லட்சம் இணைப்புகளில் உள்ள மின்சார பம்ப் செட்டுகளை அகற்றிவிட்டு அவற்றுக்குப் பதிலாகத் திறன்மிகு மின் மோட்டார்களைப் பொருத்தப்போவதாகத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மின் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளது.

இந்தத் திறன்மிகு மோட்டார் திட்டம் அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் செயல்படுத்தி முடிக்கப்படும் என்றும் இலக்கு நிர்ணயித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

திறன் மிகு மோட்டார்கள் பொருத்தப்பட்டால் என்ன ஆகும்?

“வேளாண்மைக்கு இலவச மின்சாரம் பெறுவதற்கான விதிமுறைகளின்படி, 5 குதிரைத் திறனுக்கும் குறைவான சக்திகொண்ட மின் மோட்டார்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழ் சென்று விட்டது.

பல மாவட்டங்களில் ஆயிரம் அடிக்கும் கீழ்தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில்கூட 500 அடி ஆழத்திலிருந்துதான் நிலத்தடி நீரை எடுக்க முடியும். இவ்வளவு ஆழத்திலிருந்து தண்ணீரை இறைக்க வேண்டுமானால் குறைந்தது 7.5 குதிரை சக்தி முதல் 10 குதிரை சக்தி வரை திறன்கொண்ட மின்சார மோட்டார் தேவை. இலவச மின்சாரத்துக்கான விதிகளின்படி 5 குதிரைத் திறன் கொண்ட மோட்டார்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றபோதிலும், விவசாயிகள் அதிக சக்திகொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், உதய் திட்டத்தின்படி பொருத்தப்படவுள்ள திறன்மிகு மின்மோட்டார்கள் 5 குதிரை சக்தி மட்டுமே சக்தி கொண்டவை ஆகும். இவை பொருத்தப்பட்டால், அவற்றைப் பிறகு மாற்றவே முடியாது; அது மட்டுமின்றி, திறன்மிகு மோட்டார்களைக்கொண்டு 800 அடிக்கும் கீழ் உள்ள நிலத்தடி நீரை இறைக்க முடியாது.

இந்த ஆண்டு மட்டுமல்ல, இனி ஒவ்வோர் ஆண்டும் 10% மோட்டார்கள் திறன்மிக்கவையாக மாற்றப்படும் என்பதால் அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து மோட்டார்களும் திறன்மிகு மோட்டார்களாக மாற்றப்படும். இப்போது இருப்பதைவிட இனிவரும் ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறையுமே தவிர, கூடப்போவதில்லை. இந்த நிலையில் 5 குதிரை சக்தி திறன் கொண்ட திறன்மிகு மோட்டார்களைக் கொண்டு ஒரு சொட்டு நிலத்தடி நீரைக்கூட எடுக்க முடியாது. இதனால் மின் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும். இது இலவச மின்சாரத்தைப் பறிப்பதற்கு சமமான செயலா இல்லையா?

இந்தக் கேள்வியைக் கடந்த மார்ச் மாதமே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுப்பினார். தமிழக அரசோ, உதய்க்கு முகூர்த்தம் குறித்த மின்சார அமைச்சரோ, மத்திய அரசோ இதுவரைக்கும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

உதய் திட்டத்தின் தீய விளைவுகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. இலவச மின் இணைப்புகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துதல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ள உள்ளது.

இது ட்ரெய்லர்தான். தமிழக மக்களைப் பாடாய்ப்படுத்தப்போகும் மெயின் பிக்சர் இனிமேல்தான் இருக்கிறது என்கிறார்கள் உதய் திட்டம் பற்றி அறிந்த தமிழக மின்சார வாரியப் பொறியாளர்கள்.

அப்படியென்றால் ஜெயலலிதா எதிர்த்த ஒப்பந்தத்தை, யாருக்காக அன்றைய முதலமைச்சர் ஓ.பன்னீர் ஏற்றுக்கொண்டார்?

பொம்மலாட்டத்தில் இதெல்லாம் சகஜம்தானே...

(அடுத்த ஆட்டம் புதன் அன்று)

ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 1, கதை - 2, கதை - 3, கதை - 4, கதை - 5, கதை - 6

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon