மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

மாற்றம் கண்ட எடப்பாடி நகரம்: முதல்வர்!

மாற்றம் கண்ட எடப்பாடி நகரம்: முதல்வர்!

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்டோபர் 8) திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடங்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா இருக்கிற காலத்திலேயே இங்கே இருக்கிற பொதுமக்கள், கழக நிர்வாகிகள் எல்லாம், நஞ்சுண்டீஸ்வரர் திருக்கோயிலினுடைய ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டிக்கொடுத்தால், இப்பகுதி மக்களின் திருமண நிகழ்ச்சி இங்கே நடக்கிறபோது, இந்த மண்டபம் மிகுந்த பயனளிக்கும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

புரட்சித்தலைவி அம்மாவிடத்திலே நான் இதை சொன்னவுடன், 2015-2016ஆம் ஆண்டே இதற்கு நிதி ஒதுக்கித் தந்தார்கள். ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு போதாது, பெரிய மண்டபமாகக் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, இது பரிசீலனையில் இருந்து கொண்டிருந்தது. இப்போது இந்த மண்டபத்துக்காக, தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சார்பாக 2.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

எடப்பாடி நகரமே ஒரு மாற்றத்தை கண்டிருக்கிறது. 2011க்கு முன்பு, எடப்பாடி நகரம் எப்படி இருந்தது, 2011க்குப் பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எப்படி எடப்பாடி நகரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் 2011 தேர்தலில், வீடு வீடாக எடப்பாடி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கும்போது அவர்கள் வைத்த கோரிக்கை குடிநீர் பிரச்னை. வெள்ளாண்டி வலசு போகும்போது, அங்கு இருக்கிற ஒரு தாய், ஒரு பாட்டில் எடுத்துவந்து தண்ணீர் பிடித்து சுமாராகத்தான் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்தவுடனேயே அம்மா அவர்களிடம் எடுத்துச் சொல்லி எங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை அப்படியே அம்மாவிடத்தில் சொன்னவுடனே, 20 கோடி ரூபாய் கொடுத்து, எடப்பாடி நகர மக்களுக்கு தனியாக குழாய் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அளித்திருக்கிறோம்.

இதெல்லாம் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத சாதனை, இன்றைக்கு அம்மாவினுடைய அரசு செய்து கொடுத்திருக்கிறது. வெள்ளாண்டி வலசு மற்றும் கண்டம்பட்டிக்கு இடையே பாலம் வேண்டுமென்று கேட்டீர்கள், அந்த பாலத்தையும் அம்மா கட்டிக் கொடுத்தார்கள். புதிதாக கண்டம்பட்டியிலிருந்து டவுனுக்குச் செல்ல ஒரு பாலம் கேட்டீர்கள். அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, அப்பணி விரைந்து தொடங்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு டிரைனேஜ் வசதி கேட்டீர்கள், அதையும் அம்மா செய்து கொடுத்தார்கள். ரேஷன் கடையைக் கேட்டீர்கள், அதையும் அம்மா கொடுத்தார்கள்.

கூடுதல் பள்ளிக் கட்டடம் வேண்டுமென்று கேட்டார்கள், அதையும் கொடுத்தார்கள். கல்லூரி வேண்டுமென்று பல்லாண்டு காலமாக கோரிக்கை வைத்தீர்கள். அம்மா அவர்கள் இருக்கிற காலத்திலேயே 2011லேயே அருமையான கல்லூரி கொடுத்து, அற்புதமான கட்டடத்தை கொடுத்து, இன்றைக்கு 1,100 பேர் படிக்கிறார்கள். இப்போது எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருக்கிற மாணவ மாணவிகள், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கின்ற மாணவ மாணவிகள் எல்லாம் உயர்கல்வி படிக்க வேண்டுமென்பதற்காக இன்றைக்கு வனவாசி பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

பழனிசாமி திறந்துவைத்த ரூ.30.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிபாளையம் - ஈரோட்டை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. 430 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலத்தில் 16 தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon