மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

சிறப்புப் பேட்டி: மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்!

சிறப்புப் பேட்டி: மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்!

WHO துணை இயக்குநராகவிருக்கும் டாக்டர் சௌமியா சுவாமிநாதனுடன் நேர்காணல்

- மேனகா ராவ்

இந்திய மருத்துவக் கழகத்தின் தற்போதைய தலைவரான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், விரைவில் சர்வதேச பொது சுகாதார அமைப்பில் இரண்டாம் உயர்நிலை வகிக்கும் உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்க உள்ளார்.

சௌமியா சுவாமிநாதன், குழந்தைகள் நல மருத்துவர். இவருக்கு மருத்துவ ஆராய்ச்சியில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. அவரது ஆராய்ச்சிகளில் பெரும்பகுதி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் காசநோய், அதில் ஏற்படும் நோய்த்தொற்று நோய்க்கிருமி தாக்கம், நோயாளிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, எச்.ஐ.வி நோய்த்தொற்றுகளின் பாதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

எத்தியோப்பியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ரியேஸஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus) இயக்குநர் ஜெனரலாகப் பொறுப்பேற்றுச் சில மாதங்களான நிலையில்தான், சௌமியா துணை இயக்குநர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வளரும் நாடுகளின் ஆரோக்கிய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நியமன அறிவிப்பு வந்ததும் ஸ்க்ரால்.இன் சார்பில் சௌமியாவிடம் பேசினோம். உலக சுகாதார அமைப்பின் புதிய பயணம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவது, மருந்துகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதை மேம்படுத்துதல் தொற்றுநோயைக் கையாள்வது பற்றி அவர் கூறியவற்றிலிருந்து சில பகுதிகள்:

WHOன் இயக்குநர் டாக்டர் கேப்ரியேஸஸ் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர். நீங்கள் இந்தியாவில் அதிகமாகவும் ஆழமாகவும் வேலை செய்துள்ளீர்கள். இதற்கு முன்னர், WHOவில் உள்ள பெரும்பாலான உயர் பதவிகளில் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களே இருந்தனர். வளரும் நாட்டில் இருந்து செல்லும் உங்கள் அனுபவம், உங்களது இந்தப் புதிய பயணத்தில் எப்படி உதவும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் உள்ள சுகாதார அமைப்பை நான் மிக அருகில் பார்த்திருக்கிறேன் என்பதுதான் முக்கியமான வேறுபாடு என்று நினைக்கிறேன். வறுமையின் நோய் என்று கருதப்படும் காசநோய் போன்ற நோயைப் பொறுத்தவரையில், நல அமைப்புகள் மற்றும் நோயைத் தீர்மானிக்கும் சமூகச் சூழல்களை ஆகிய இரு முக்கியமான கூறுகளையும் மிக நுட்பமாகக் கவனித்திருக்கிறேன். நாம் மேலும், நடைமுறைக்கேற்ற அணுகுமுறையுடன் செல்லலாம்.

உங்கள் அணுகுமுறை எந்த விதத்தில் வித்தியாசமாக இருக்கும் என்பதைப் புரியவைக்க ஒரு உதாரணம் கொடுக்க முடியுமா?

WHOஇல் நிறைய வேலைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய தரநிலைகள், வழிகாட்டு நெறிகளை அமைப்பது எங்கள் முக்கியமான வேலையாகும். கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வல்லுநர்களைக் காட்டிலும் எங்களது அணுகுமுறை சற்று வித்தியாசமாக இருக்கும். வழிகாட்டுதல்களை மட்டும் உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை. அது வேலை செய்யாது. வளரும் நாடுகளில் சுகாதார அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது வழிகாட்டுதல்களை பின்பற்ற உதவும்.

சமீபத்தில் புதிய தொற்றுநோய் அச்சுறுத்தல்களைப் பார்த்து வருகிறோம். எபோலாவிலிருந்து Zika வைரஸ்வரை, தற்போது கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய மலேரியா வரை பலவற்றைக் காண்கிறோம். இந்த நோய்களை எதிர்ப்பதற்கும், தற்காத்துக்கொள்வதற்கும், அனைத்து நாடுகள், சர்வதேச சுகாதார அமைப்புகள் ஆகியவற்றை எவ்வாறு WHO தயார் செய்யப் போகிறது?

இத்தகைய சூழ்நிலைகளில், WHO நாடுகளை ஒன்று திரட்ட வேண்டும். அவசர உதவிகள் வழங்குவதில் சுகாதாரத்தையும் அக்கறையையும் மேம்படுத்த வேண்டும். ஒரு புதிய மருந்து அல்லது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவது எப்படி, அதை அனைவருக்கும் வழங்குவது எப்படி என்பதுதான் மிக முக்கியம். ஒரு நோயைச் சமாளிக்க உதவும் வகையில், பல்வேறு குழுக்கள், தனி நபர்கள் ஆகிய அனைவரையும் நாம் ஒன்று சேர்க்க வேண்டும். எபோலாவைப் பொறுத்தவரை, சோதனைக்கான ஒப்புதல்களைக் கோரியபோது, தடுப்பூசிக்கான சோதனைகள் முடிக்கப்பட்டபோதே, திடீரென அந்நோய் தாக்குதல் வீழ்ச்சி அடைந்துவிட்டது. இத்தகைய திடீர் நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும், மேலும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்க வேண்டும். ‘உலகளாவிய ஆண்டிபயாடிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டு’ போன்ற, சிகிச்சைத் திட்டங்களை வளர்க்கும் உலகளாவிய கூட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவை நான் செயல்படுத்த நினைக்கும் திட்டங்களாகும். WHO, மேலும் ஆராய்ச்சி மற்றும் சான்றுகளைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். இதுவரை, WHO ஆராய்ச்சிகளுக்கான ஆதரவை வழங்கிவருகிறது. WHO ஆராய்ச்சிகளை நடத்தினால், கூடுதல் நன்மையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

டாக்டர் கேப்ரியேஸஸ் உலகளாவிய சுகாதார பாதுகாப்பில் WHOஇன் கவனம் இருக்கப் போவதாகக் கூறினார். இந்த இலக்கை அடைய என்ன சவால்களைச் சந்திக்க வேண்டி வரும்?

உள்கட்டமைப்பு, மனிதவளங்கள் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட சுகாதார அமைப்புகளின் அனைத்து அங்கங்களையும் வலுப்படுத்துவதோடு, அனைவருக்கும் தரமான, பாதுகாப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்பதுதான் சவால். ஏழை நாடுகளில் நிதி மற்றும் மனிதவளங்களின் குறைபாட்டினால்தான் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைப் பெற கஷ்டப்படுகிறார்கள். அதை எப்படிச் சரி செய்வது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் இதைச் செய்ய முடிகிறது. தாய்லாந்து அதைச் செய்திருக்கிறது. இது எளிதாகச் செய்துவிடக் கூடிய ஒரு விஷயமல்ல. உலகளாவிய ரீதியில் இப்பிரச்னையைத் தீர்க்க ஒன்றுசேர வேண்டும். ஏழைகளுக்குப் பல மருந்துகள் கிடைப்பதில்லை.

மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு என்ன செய்யலாம்?*

இது கடினமான சவால். இப்பிரச்னை வணிக நலன் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. முழுக்க முழுக்க சுகாதார அமைச்சகங்கள் மற்றும் WHO கையில் இருக்கும் விஷயமல்ல இது. இதற்கு நிறைய பேச்சுவார்த்தை, சர்வதேச ஆலோசனை ஆகியவை தேவைப்படுகின்றன. உதாரணமாக, Medicines Patent Pool மருந்துகளை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிசெய்யும் ஒரு குழுமம். இதைப் போல பல அமைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. பல நோய்களுக்கு, மருந்துகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. அவை அனைவரையும் சென்றடையவும் வழிசெய்ய வேண்டியிருக்கிறது. இது மிகவும் சவாலாக பணியாகவே இருக்கும்.

உங்கள் ஆராய்ச்சி காசநோயை மையமாகக் கொண்டது. காசநோயைக் கட்டுப்படுத்துவதற்கு WHO எவ்வாறு செயல்படுகிறது?

காசநோய் (TB) உலக அளவில் முன்னுரிமை பெற்ற ஒரு நோய். இனியும் அது அப்படியே இருக்கும். அந்நோயை நீக்குவதற்கான செயல்பாடுகளில் இந்தியாவுக்குப் பெரிய பங்கு உள்ளது. மருந்துகள் மக்களுக்குக் கிடைப்பதை எளிமையாக்க வேண்டும். தனியார் துறையின் பங்களிப்பையும் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவில் தனியார் துறையை ஈடுபடுத்துவது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

தொற்று அல்லாத நோய்கள், தற்போது பணக்காரர்களின் பிரச்னையாக மட்டும் அல்லாமல், அனைவருக்குமான பிரச்னையாக இருக்கின்றன. இந்நோய்களைக் கையாள்வதில் உங்கள் திட்டங்கள் என்ன?

தொற்று அல்லாத நோய்களுக்குப் பல்நோக்கு, பல்துறை அணுகுமுறை தேவை. காற்று மாசுபாடு இந்நோய்களின் ஒரு முக்கிய காரணி. இப்பிரச்னையில் சுகாதார அமைச்சகத்தின் பங்கைக் காட்டிலும், சுற்றுச்சூழல் அமைச்சகம் போன்ற மற்ற அமைச்சகங்களின் பங்கை நாம் அதிகப்படுத்த வேண்டும்.

உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பின் அளவுகளைக் கண்காணிக்க, உணவுப் பொருள்களின் மீது அவற்றைக் குறிப்பிடும் food labellingஇல் மாற்றம் கொண்டுவர வேண்டும். உணவு வரிகளையும் அதிகரிக்க வேண்டும். இது நிதி அமைச்சகங்கள் மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய ஒரு வேலையாகும். நோய் வருமுன்னர் காப்பது என்பது மற்றொரு பெரிய சவாலாக இருக்கும்.

நன்றி: scroll.in

தமிழில்: ந.ஆசிபா பாத்திமா பாவா

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon