மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

டெங்கு: அக்டோபர் 11இல் வி.சி.க ஆர்ப்பாட்டம்!

டெங்கு: அக்டோபர் 11இல் வி.சி.க ஆர்ப்பாட்டம்!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (அக்டோபர் 08) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் பத்து பேர் என டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவுக்குப் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழக அரசு டெங்கு காயச்சலைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காதது மட்டுமின்றி, டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டி உண்மையை மூடி மறைத்து வருகிறது.

தமிழக அரசின் இந்தப் போக்கைக் கண்டித்தும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குவுக்கும் சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும் அக்டோபர் 11ஆம் தேதி புதன்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு நாளும் பத்து முதல் இருபது பேர் வரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10,392 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும் மொத்தத்தில் காய்ச்சல் காரணமாக 75 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 27 பேர் மட்டும்தான் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது முழு பூசணிக்காயைச் சோற்றுப் பருக்கையில் மறைப்பதைப் போன்றதாகும். முந்தைய ஆண்டுகளைவிட தற்போது டெங்கு மரணம் அதிகமாக இருப்பதற்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி அமைப்புகள் முடக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும். சுகாதார நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் சரியாக செயல்படுத்த முடியும்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. கொள்ளைநோய் சட்டம் 1897 (Epidemic Diseases Act of 1897) அதற்கு வழிசெய்கிறது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்தாமல் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பாஜகவின் முன்னணித் தலைவர்கள் மாநில அரசை மட்டும் குறைகூறிப் பேசி வருகின்றனர். டெங்குவிலும் அரசியல் ஆதாயம் தேடும் அவர்களது செயல் வேதனையளிக்கிறது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சையை உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தியும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon