மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

டெங்கு: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு!

டெங்கு: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த மரணங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த சில நாள்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் நெரிசல் காரணமாக மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை நெருங்கும் நிலையில், அவர்களைக் கைவிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தனியார் மருத்துவமனைகள் அனுப்பி விடுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்காமல், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்களில் அனுப்பி விடுகின்றன. அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரக் காய்ச்சல் சிகிச்சை மையம் தொடங்கும் அளவுக்கு டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

குழந்தைகள் வார்டுகளில் ஐசியூ பிரிவிலும், பொது வார்டுகளில் வைத்தும் டெங்கு பாதித்த குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நோயாளிகள் குவிவதால் மருத்துவமனையில் அவர்களுக்குப் போதிய படுக்கை வசதியில்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், படுக்கை வசதியில்லாமல் அவர்கள் தவிப்பதும், முழுமையான சிகிச்சை பெறும் முன்பே டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது.

ஆனால்,“காய்ச்சலுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலியாக இருக்கிற படுக்கைகளை ஒருங்கிணைத்துக் காய்ச்சல் நோயாளிகள் தடையின்றி சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் அதிகமாக வந்தால் மற்ற வார்டுகளிலும் வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது” என மருத்துவமனை டீன் மருது பாண்டியன் கூறுகிறார்.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon