சீன ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனத் தலைநகரான பெய்ஜிங் நகரில், சீன ஓப்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 8) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபெல் நடாலும், தரவரிசையில் 19ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் கைக்ரோஸை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-2 என நடால் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து நடந்த இரண்டாம் சுற்றையும் நடால், 6-1 என எளிதில் கைப்பற்றிப் பட்டத்தை வென்றார்.
அக்டோபர் 8 அன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையருக்கான இறுதிப் போட்டியில் மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - சான் (தைவான்) ஜோடி, ஹலாவாகோவா (செக் குடியரசு) - பாபுஸ் (ஹங்கேரி) ஜோடியை எதிர்கொண்டனர். பரபரப்பான இந்தப் போட்டியில் ஹிங்கிஸ் ஜோடி, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஹலாவாகோவா ஜோடியை வீழ்த்தி, பட்டத்தைக் கைப்பற்றியது.