மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: கமல் ரஜினி: யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? - 3

சிறப்புக் கட்டுரை: கமல் ரஜினி: யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? - 3

ம.தொல்காப்பியன்

மக்கள் அபிமானம் என்பது வேறு; ரசிக அபிமானம் என்பது வேறு.

இங்கே முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ரஜினிக்கு இருப்பது மக்கள் அபிமானம் இல்லை. அது ரசிக அபிமானம் மட்டுமே.

எம்.ஜி.ஆருக்கு இருந்தது மக்கள் அபிமானம். சிவாஜிக்கு இன்றுவரை இருப்பது ரசிக அபிமானம். ரசிக அபிமானத்துக்கு ஓர் எல்லை உண்டு. மக்கள் அபிமானம் எல்லைகள் அற்றது.

ரசிக அபிமானம் என்பது ஒரு மாயை. அது ஒரு தலைவனை உருவாக்கிவிட போதுமானது அல்ல என்பதை காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. கே.பாக்யராஜ், ராமராஜன் போன்ற நடிகர்களுக்குக் கிடைத்த மாபெரும் ரசிக அபிமானம் அவர்களை அரசியல் களத்தில் அமர்த்தி விடவில்லை. வந்த வேகத்தில் அவர்கள் திரும்பிச் சென்றதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசியலில் ஒரு சக்தியாக உருவாக ரசிக அபிமானம் அல்ல மக்கள் அபிமானம்கூடப் போதுமானது அல்ல; அத்தோடு வேறு ஒன்றும் தேவை என்பதையே அவர்களின் கடந்த காலம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. அது என்ன?

கூரிய மதிநுட்பம் தேவை

எம்.ஜி.ஆரிடம் இருந்த நுண்ணிய மதிநுட்பம்தான் இலக்கை நோக்கி அவரை நகர்த்திச் சென்றது. எம்.ஜி.ஆர். நடிப்பதோடு நின்றுவிடவில்லை. பாடல், இசை, திரைக்கதை, கதை, வசனம், அரங்க அமைப்பு, மேக்கப், இயக்கம் என்று தனது அறிவாற்றலைச் செம்மையாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்தார். அவ்வாறு பயன்படுத்தித்தான் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கிக் கொண்டார் அல்லது அவரது மதிநுட்பம் அவரைத் தகுந்த இடம் நோக்கி இட்டுச் சென்றது. எப்படியானாலும் மக்கள் அபிமானம் மட்டுமே அவர் சாதிக்கப் போதுமானதாக இருக்கவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கமலை எம்.ஜி.ஆரின் வாரிசு என்று தயக்கமின்றிக் கூறலாம். கமல்ஹாசனின் திரைப்பட அறிவு பிரசித்தி பெற்ற ஒன்று.

ஆனால், எம்.ஜி.ஆரைப்போல கமல்ஹாசனுக்கு மக்கள் ஆதரவு இல்லையே என்ற கேள்வி எழலாம். அதனால், ஒன்றும் குறைந்துவிடப்போவது இல்லை. கமல் தனது அறிவாற்றலால் அதை வென்று காட்டுவார் என்றே கருதுகிறேன்.

கமலுக்கு அரசியல் ரீதியாக மக்கள் ஆதரவு இல்லை என்ற தோற்றம் உருவானதற்குக் காரணம் அவர் வெளிப்படுத்தும் அரசியலே அன்றி வேறல்ல. அவர் ஆதிக்க திசை நோக்கி ஒருபோதும் சிந்திக்கவில்லை. அதுமட்டும் அல்ல. ‘மக்கள் தலைவன்’ ஆகிவிடக் கூடாது என்ற நோக்கில் அவர் நிறைய உள் அரசியலை தன் வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே வந்திருக்கிறார். ரஜினி போன்ற சக நடிகர்களோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதது, ரசிகர் மன்றங்களைக் கலைத்து அவற்றின் அபிமானங்களை மழுங்கடித்தது, தனது துறை சார்ந்த எளியவர்களைவிட தான் உயர்ந்தவன் அல்ல என்ற சமத்துவப் போக்கைக் கடைப்பிடித்தது, தன்னையும் தனது செயல்களையும் தனிமைப்படுத்திப் பேசுபொருள் ஆக்காமல் எப்போதும் தேவைப்படும்போதெல்லாம் சாமானியர்களோடு கூடி இருப்பது போன்ற அவரது ‘உள்ளரசியல்’ நடத்தைகளைச் சான்றாகக் கூறலாம்.

அதே நேரத்தில் கமல் தனது சீட்டுகளைச் சரியாக ஆடினால் அபரிமிதமான மக்கள் செல்வாக்கை அவரால் பெற முடியும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்குக் காரணம் இந்த மண்ணின் குறிப்பிட்ட இயல்புதான். இது பகுத்தறிவின் விளை நிலம். இங்கே கோயிலுக்குச் செல்பவர்கூடப் பகுத்தறிவின் அடிப்படையில்தான் முடிவெடுப்பார். இந்த மண்ணின் மைந்தர்கள் பகுத்தறிவாளர்கள் மீது கோபத்தில் இருப்பதன் காரணம் இங்கே பகுத்தறிவாளர்கள் பலர் வேடதாரிகளாக இருப்பதால். கமலிடம் இருப்பது இயல்பான பகுத்தறிவு. இது தமிழரை அவர்பால் கவர்ந்து இழுக்கும்.

கமல் தனது கூர்ந்த மதி நுட்பத்தால் மக்கள் ஆதரவை வென்று காட்டுவார் என்பதை மெய்ப்பிக்கும் மற்றொரு சூழ்நிலைச் சான்றும் நம்மிடம் இருக்கிறது.

ஜெயலலிதா அரசியலுக்குத் தானே வந்தவர் அல்ல. மக்களால் விரும்பி அழைக்கப்பட்டவரும் அல்ல. எம்.ஜி.ஆரால் வற்புறுத்திக் கொண்டு வரப்பட்டவர். உண்மையைச் சொன்னால் ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு என்பது அறவே இருக்கவில்லை. அதோடு அவருக்கு எதிர்ப்பும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீதான கசப்புணர்வும் நிறையவே இருந்தது. மேலும், எத்தனை ஆற்றல் வாய்ந்தவராக இருந்தபோதும் ஒரு பெண்ணை அதுவும் ஒரு நடிகையை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த அன்றைக்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை. ஆனால், ஜெயலலிதா அதே மக்களின் அபிமானத்தையும் இரக்கத்தையும் வேறு ஒரு வகையில் பெற்றார்.

எம்.ஜி.ஆரின் சிதை ஏற்றப்பட்ட வண்டியிலிருந்து உலக மக்களின் கண் எதிரே ஜெயலலிதா உதைத்துத் தள்ளப்பட்டதும், அதன்பின் சட்டமன்றத்தில் அவருடைய சேலை உரியபட்டதும் அவருக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவை வாங்கித் தந்தது. அதன் பிறகு தனக்கே உரிய அறிவாற்றலால் ஜெயலலிதா நிலைத்து நின்றார்.

எம்.ஜி.ஆரின் திட்டமிடலும், கூர்ந்த மதியும் ஒருங்கே அமையப் பெற்றவர் கமல்ஹாசன். தான் ஈடுபட்ட திரைப்படத்துறையில் ஈடு இணை இல்லாத சாதனைகளைப் புரிந்ததைப்போல, கமல் அரசியலில் இறங்குவாரேயானால், இங்கும், நிச்சயமாகத் தனது அறிவாற்றல் துணையோடு அரசியலிலும் ஆகச் சிறந்த சாதனைகள் பல செய்வார் என்பதே எனது கருத்து..

சிவாஜி கணேசனைப் போன்றவர் ரஜினிகாந்த். சிவாஜியைப் போலவே ரஜினி விரைவில் துவண்டு போவார். அரசியலுக்கு வந்தால் வந்த வேகத்தில் திரும்பிச் செல்வார். அவர் ஒரு குழந்தை. அவரால் தப்பும் தவறுமாக விளையாடத்தான் முடியும். சிந்தித்துக் காரியங்களை ஆற்ற முடியாது. அத்தனை எளிதான குழந்தை விளையாட்டு அல்ல அரசியல்.

எம்.ஜி.ஆரின் திறன்கள் கமலிடம்தான் உள்ளன. கமல் நிச்சயம் அரசியலில் சாதிப்பார். அவருடைய சாதனை மக்களுக்கும், நாட்டுக்கும் குறிப்பாக, தமிழ்ச் சமூகத்துக்கும் பெரும் நன்மைகளைக் கொண்டுவரும்.

(கட்டுரையாசிரியர் ம.தொல்காப்பியன் எழுத்தாளர், இயக்குநர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கமல் ரஜினி: யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? -1

கமல் ரஜினி: யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு? -2

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon