மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

விதவையைத் திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்!

விதவையைத் திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்!

விதவையைத் திருமணம் செய்வோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விதவை மறுமணம் என்பது குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. இந்தியாவில், கடந்த 1856ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது விதவை மறுமணம் சட்டப்பூர்வமானது. விதவை மறுமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டு 150 ஆண்டுகள் கடந்த பின்பும் குறைந்த அளவிலேயே அவை நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம், விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், விதவைகளைத் திருமணம் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மத்தியப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. விதவைகள் மறுமணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்தியப்பிரதேச சமூக நீதித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருமணம் செய்துகொள்ளும் மணமகனுக்கு வயது 18 முதல் 45க்குள் இருக்க வேண்டும். இது அவரது முதல் திருமணமாக இருக்க வேண்டும். தங்களின் திருமணத்தை அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளால் வழங்கப்படும் ஆதாரங்கள் ஏற்கப்படாது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆண்டுக்கு 1000 விதவைகளுக்குத் திருமணம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடியை மத்தியப்பிரதேச அரசு ஒதுக்கவுள்ளது. இந்த வரைவு நிதித்துறைக்கு அனுப்பத் தயார் நிலையில் உள்ளது. பின்னர் ஒப்புதலுக்காக அமைச்சரவை முன் வைக்கப்படும். அடுத்த மூன்று மாதங்களில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon