மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

மின்சாதனம் பயன்படுத்தும் மனிதாபிமானமற்றவர்கள்!

மின்சாதனம் பயன்படுத்தும் மனிதாபிமானமற்றவர்கள்!

முத்துப்பாண்டி

இயற்கை வளங்களிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆபரணம் வைரம். இது பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து கிடைக்கிறது. பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் இருக்கும் இந்த வைரத்தை வெளியே எடுப்பதற்கு ஏற்படும் சிரமத்தினை அனைவரும் செய்திகள் மூலமாகவோ, லியோனர்டோ டிகாப்ரியோ நடித்த `ப்ளட்டைமண்ட்' படத்தின் மூலமாகவோ அறிந்திருப்போம். மனிதாபிமானமற்ற முறையில் பலரின் உயிரைப் பணயம் வைத்தே அவை நம் கைகளுக்குக் கிடைக்கிறது. இதை அறிந்த பலர் திருமணத்தின்போது பயன்படுத்தும் மோதிரத்தில்கூட வைரத்தைத் தவிர்த்து விடுகின்றனர். அதேபோல் தினசரி வாழ்வில் மின்சாதனப் பொருள்கள் அதிகம் பயன்படுத்துவோர், அதற்குப் பின்னணியில் இருக்கும் மனிதாபிமானமற்ற செயல்களை உணர்ந்தால் ஒருவேளை அதைப் பயன்படுத்தாமல்கூட போக வாய்ப்புள்ளது.

வைரத்தை எடுப்பதற்குத் தானே பிரச்னை, மின்சாதனப் பொருள்கள் பயன்பாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா? நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது. அதை இந்தக் கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருள்களான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஐ-பாடுகள் போன்றவை மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டன. இந்தச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள், உலோகங்கள் அனைத்தும் வைரங்களைப் போலவே மனித உரிமைகளை மீறி, மனிதாபிமானமற்ற முறையில் உயிரைப் பணயம் வைத்துப் பெறப்படுபவையே.

சமீபத்தில் வெளியான அமெரிக்கச் சட்டத்தின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால், மின்சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படும் டான்டலம் (கெப்பாசிடர்கள் செய்யப் பயன்படுபவை), டங்ஸ்டன் (பிலமென்டுகள் செய்யப் பயன்படுபவை), டின் (ராணுவ வீரர்களுக்கு எலெக்ட்ரானிக் சர்க்யுட் செய்யப் பயன்படுபவை), தங்கம் (எலெக்ட்ரானிக் சர்க்யுட் போர்டுகள் செய்யப் பயன்படுபவை) ஆகிய உலோகங்கள் காங்கோ, அங்கோலா, ரவாண்டா போன்ற ஏழு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. இத்துடன் இன்னொரு முக்கிய உலோகம் கோபால்ட் ஆகும். இது பெரும்பாலும் புதுப்பிக்கக் கூடிய பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. வாஷிங்டன் போஸ்ட்டில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்த கோபால்ட் உலோகம், காங்கோ நாட்டில் மிகவும் ஆபத்தான முறையில் மனிதர்களைக்கொண்டு கையில் தோண்டி எடுக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி மின்சாதன உற்பத்தியாளர்கள், அதன் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பெற குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவையே நாடியுள்ளது. இந்த உலோகங்களைப் பெற இவ்வளவு சிரமங்கள் இருப்பது சில நேரங்களில், உற்பத்தியாளர்களுக்குத் தெரியாமல்கூட இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களுக்கு அந்த மூலப்பொருள்கள் கிடைப்பதற்குள், குறைந்தபட்சம் 10 நபர்கள் கைமாறியிருக்கும். ஒவ்வொரு முறை நாம் புதிய மின்சாதனப் பொருள்கள் வாங்கும்போதும் மறைமுகமாக அந்த கனிமச் சுரங்கங்களுக்குப் பணம் செலுத்துகிறோம் என்பதை மறக்க வேண்டாம். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, உலகம் முழுதிலும் இந்த வருடம் மட்டும் 153 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் பிரச்னை என்னவென்றால், மின்சாதனங்கள் பழுதடைந்தவுடன் நாம் அதனைத் தூக்கி எறிந்து விடுகிறோமே தவிர, அதைச் சரியான முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகிறோம். அமெரிக்காவில் வெறும் 29 சதவிகிதம் மின்சாதனப் பொருள்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மற்றவை அனைத்தும் கழிவாகச் செல்கிறது. நாம் தூக்கி எறியும் ஒவ்வொரு மின்சாதனப் பொருள்களிலிருந்து வெளிவரும் ப்ரோமைடு, பெரிலியம் போன்ற நச்சுத்தன்மை மண்ணுக்குள் சென்று மண்ணையும் நிலத்தடி நீரையும் பாதிப்படையச் செய்கிறது.

மறுசுழற்சி ஒன்றே இதற்கான தீர்வு எனக் கருதப்பட்டாலும் அதிலும் சிக்கல்கள் உள்ளன. அமெரிக்காவில் மறுசுழற்சிக்காக வரும் மின்சாதனப் பொருள்களில் 80 சதவிகிதம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அது நேராக இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் இ-சந்தைக்கு (எலெக்ட்ரானிக் சந்தை) வருகிறது. இ-சந்தையில், மின்சாதன பொருள்களில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்தெடுக்க முதலில் எரியூட்டப்படும். பிறகு அதிலுள்ள மூலக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்தபின் உருக்கு ஆலைக்கு அனுப்பப்படும். இந்தச் செயல்முறையின்போது வெளிவரும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களால் அதைச் சுவாசிக்கும் பணியாட்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படைகின்றனர்.

கார்ட்னர் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில், உலகம் முழுவதும் தற்போது இ-கழிவுகள் மிக வேகமாகப் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் 2000 கோடிக்கும் மேல் ஸ்மார்ட்போன்கள் உபயோகத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பழுதடையும் அனைத்தும் நம் சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதோடு மனிதாபிமானமற்ற ஒரு சூழலுக்கும் வழிவகுக்கிறது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காமல், மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் இதைச் சீர் செய்வதே நம் நோக்கம். இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது.

மின்சாதனப் பொருள்களின் அபரிமிதமான வளர்ச்சியால், நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய சாதனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தயாரிப்பு நிறுவனங்களும் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்கள் பொருள்களை மக்களிடம் கொண்டு திணிக்கின்றன. உடனே மக்களும் தான் பயன்படுத்தும் சாதங்களைத் தூக்கி எரிந்துவிட்டு புதிய தொழில்நுட்பத்தை நோக்கி ஓடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளரிடம் மின்சாதனங்களை புதுப்பித்துக்கொள்ளும் வசதியை ஊக்குவிக்க வேண்டும். இதனால் பொருள்கள் தூக்கி எறியப்படுவது குறைக்கப்படும்.

இந்த முயற்சியில் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பொருள்களை திரும்பப் பெறும்போது அவர்களே வாடிக்கையாளர்களாக மாறுகின்றனர். அவர்களுக்குத் தேவையான மூலப் பொருள்கள் பழைய சாதனங்களிலிருந்தே கிடைத்து விடுவதால் கனிமவளம் பாதுகாக்கப்படுகிறது.

நீருக்கு அடியில் சக்தி வாய்ந்த ஒலி அலைகளை எழுப்புவதன் மூலம் மின் சாதனங்களில் உள்ள மூலக் கூறுகளை எளிதில் பிரித்தெடுக்க முடியும். இதில் பிளாஸ்டிக், பைபர் கிளாஸ், செராமிக்ஸ் போன்றவை பாதிப்படைவதில்லை. பிரித்தெடுத்த அந்த மூலப்பொருட்களைக் கொண்டு மீண்டும் மின்சாதனங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு வடக்கே 1,000 மைல் தொலைவில் உள்ள ஒரு சோதனை மையத்தில், 36,000 பவுண்டு சர்க்யூட் போர்டுகள், சோலார் பேனல்களைக்கொண்டு வெற்றிகரமாகச் செய்யப்பட்ட சோதனையில், எரியூட்டாமல், சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் 90 சதவிகித மூலப்பொருள்கள் பிரித்து எடுக்கப்பட்டது. தற்போது மீதமுள்ள 10 சதவிகிதமும் பிரித்தெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சாத்தியமானால் எதிர்காலத்தில் இந்த மறுசுழற்சி முறையில் பெரிய புரட்சியே ஏற்படும்.

இந்த இ-கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே நாம் அதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களாகிய நாம் குரல் எழுப்பினால்தான், உற்பத்தியாளர்கள் இதைக் கண்டுகொண்டு சிறந்த விநியோக சங்கிலியை அமைத்துத் தருவர். நாம் இதைக் கண்டுகொள்ளாமல் இப்படியே விட்டுவிடுவது, நம் சந்ததியினரை நாமே அழிப்பதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.

மறுசுழற்சியை ஊக்குவிப்போம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!

நன்றி: குரியஸ்

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon