மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

இரு மொழிகளில் நஸ்ரியா?

இரு மொழிகளில் நஸ்ரியா?

தமிழில் மிகக்குறைவான படங்களிலே நடித்தாலும் நஸ்ரியாவின் குறும்புத்தனமான நடிப்பும் கள்ளம் கபடமற்ற புன்னகையும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், முன்னணி ஹீரோக்களுடன் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். மலையாளத்தில் அவர் நடிக்கவுள்ள படமானது தமிழிலும் வெளிவர இருப்பதாகத் தெரிகிறது.

தமிழ், மலையாள ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட நஸ்ரியா, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து, திரைப்பட வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள பெண் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ஆம் தேதி முதல் ஊட்டியில் தொடங்கவிருக்கிறது. மலையாளத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நஸ்ரியாவுடன் பிருத்திவிராஜ், பார்வதி ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள்.

அஞ்சலி மேனன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, பார்வதி முதலானோருடன் நஸ்ரியா நடித்த ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் தமிழில் ‘பெங்களூரு நாள்கள்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்தப் படத்தை தமிழில் டப் செய்து ஒரே நேரத்தில் வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

திங்கள், 9 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon