மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 3 ஜுன் 2020

முதல்முறையாக ஆளுநர் டெல்லி பயணம்!

முதல்முறையாக ஆளுநர் டெல்லி பயணம்!

பதவியேற்றபிறகு முதல்முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016 செப்டம்பரில் ஆளுநர் ரோசைய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, கடந்த ஓராண்டுகாலமாக தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படாத நிலைமையே இருந்து வந்தது. மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அசாம் ஆளுநர் பன்வாரிலாலை புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

கடந்த 6 ஆம் தேதி முறைப்படி ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட பன்வாரிலாலுக்கு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆளுநர் பன்வாரிலால்,வித்யாசாகர் ராவ் போல அல்லாமல் தமிழக மக்களின் நலன்கருதி நடுநிலையோடு செயலாற்றுவார் என்று நம்புகிறோம் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பதவியேற்ற அடுத்த நாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆளுநரை சந்தித்து, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும்,உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநராக பன்வாரிலால் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக இன்று (அக்டோபர் 8)விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு நாளை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார். சந்திப்பில் தமிழக அரசியலின் தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon