மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 3 ஜுன் 2020

லாரிகள் இயங்க நடவடிக்கை தேவை!

லாரிகள் இயங்க நடவடிக்கை தேவை!

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் லாரிகள் தொடர்ந்து இயக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (அக்டோபர் 08) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும், நாடு முழுவதும் உள்ள தேவையற்ற சுமார் 327 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு, பிற சுங்கச்சாவடிகளில் ஆண்டு கட்டணமாக வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நாளை (09.10.2017) மற்றும் நாளை மறுநாள் (10.10.2017) ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் லாரிகள் இயக்கப்படாது என லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு லாரிகள் 2 நாட்களும் இயக்கப்படாமல் இருந்தால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்றால் 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

நாடு முழுவதும் சுமார் 93 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் இருந்தால் பல ஆயிரக்கணக்கான கோடி ருபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுவதோடு லாரி ஓட்டுநர், கிளீனர் மற்றும் கூலித்தொழிலாளிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமல்ல தற்போது தீபாவளி பண்டிகை வர இருக்கின்ற நேரத்தில் லாரிகள் இயக்கப்படாமல் இருந்தால் சரக்குப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு, இரண்டு நாள் வியாபாரமும் பாதிக்கும்.

ஏற்கெனவே மோட்டார் சைக்கிள், 4 சக்கர வாகனங்களுக்கான எப்.சி. யானது 15 ஆண்டுக்கு ஒரு முறை என இருந்ததை ஆண்டுக்கு ஒரு முறை என மாற்றியும், அரசு நிர்ணயிக்கின்ற மெக்கானிக் பட்டறைகளில் மட்டுமே பழுது பார்க்க வேண்டும் என்றும், ஓட்டுநர் உரிமத்தை வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதும் உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் 'மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2017' - ல் இடம்பெற்றுள்ளது.

மத்திய பாஜக அரசு 'மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2017' - ல் உள்ள குளறுபடிகளையும், தேவையற்ற மாற்றங்களையும் தவிர்க்க வேண்டும். மேலும் பழுதடைந்த, தேவையற்ற சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு அதிகமாகிறது.

எனவே மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் உடனடியாக லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்து, லாரிகள் தொடர்ந்து இயக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon