17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற (அக்டோபர் 6) முதல் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இப்போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தப் போட்டி இரவு 8:00 மணிக்குத் துவங்கியபோதும், மாலை 5:00 மணிக்கெல்லாம், மாணவர்கள் மைதானத்தில் திரண்டனர். அங்கே அடிப்படை வசதியான தண்ணீர் வசதி கூட செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்னைக்கு உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழுக்கள், இந்திய விளையாட்டு அமைச்சகம் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழுக்கள், “டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது உண்மைதான். போட்டிகளைக் காண வரும் மாணவர்களுக்குத் தண்ணீர் போன்ற அடிப்படை வசதி செய்து தர வேண்டியது விளையாட்டு அமைச்சகத்தின் கடமையாகும். அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள், உலகக்கோப்பை தொடர்கள் போன்ற சர்வேதச நாடுகள் பங்கு பெறும் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியா பின்தங்கி வருவதற்கு வீரர்களை ஊக்குவித்தல், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் ஆகிய பணிகளை விளையாட்டு அமைச்சகம் முறைப்படி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை நடத்தி வரும் இந்தியா, பார்வையாளர்களுக்குத் தண்ணீர் வசதிகூட செய்து தராதது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.