மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

கௌதமுக்கு ஜோடியா வரலட்சுமி?

கௌதமுக்கு ஜோடியா வரலட்சுமி?

நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களின் இயக்குநர் திரு இயக்கும் புதிய படத்தில் நாயகியாக ரெஜினா ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள நிலையில் வரலட்சுமியும் தற்போது இணைந்துள்ளார். ‘அனேகன்’ படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக், தனது மகன் கௌதமோடு இணைந்து முதன்முறையாக பணியாற்றுவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அருண் வைத்யநாதன் இயக்கிய நிபுணன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோதும் வரலட்சுமியின் கதாபாத்திரம் பேசப்பட்டது. அதைத் தொடந்து அவர் விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2, எச்சரிக்கை, சத்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வரலட்சுமி கௌதமுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அவரது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மற்றொரு கதாநாயகியான ரெஜினா, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷாலோடு இணைந்து சிலுக்குவார்பட்டி சிங்கம், வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி ஆகிய படங்களில் நடிக்கிறார். நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து ரெஜினா படக்குழுவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஹரஹர மஹாதேவகி’யில் கௌதமோடு இணைந்து கலக்கிய சதீஷ் இந்தப் படத்திலும் நடிக்கிறார்.

2013ஆம் ஆண்டு மணிரத்னத்தின் கடல் திரைப்படம் மூலம் அறிமுகமான கௌதம் இதுவரை ஏழு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் அழுத்தமான வெற்றி இன்னும் அவருக்கு வசமாகவில்லை. தனது தந்தையுடன் கூட்டணி அமைத்துவரும் அவருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் என்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்கிறது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon