மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

அதிமுகவை சசிகலா மீட்க வேண்டும்: தனியரசு

அதிமுகவை சசிகலா மீட்க வேண்டும்: தனியரசு

‘சசிகலா தனது ஆளுமையைப் பயன்படுத்தி, பிரிந்து கிடக்கும் அதிமுகவை மீட்க வேண்டுமென வலியுறுத்துவோம்’ என்று அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார்.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டுவரும் நிலையில், கூட்டணி கட்சி உறுப்பினர்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சசிகலா ஆதரவு மனநிலையிலேயே இருந்துவருகின்றனர். நேற்றைய தினம் பேசிய தனியரசு, “சசிகலாவின் பரோலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் உள்நோக்கம் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 8) திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, “பரோலில் வந்துள்ள சசிகலாவை இன்னும் ஓரிரு நாட்களில் சக எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருடன் சந்திக்க உள்ளேன். சந்திப்பின்போது, அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்று சேர்க்கவும், மத்திய பாஜக அரசிடம் சிக்கியுள்ள அதிமுகவை சசிகலாவின் ஆளுமையைப் பயன்படுத்தி மீட்கவும் வலியுறுத்துவோம்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தாமரை மலரும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இதை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon