மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

சண்டே சர்ச்சை: திரைத்துறையைக் கட்டுப்படுத்தவா கேளிக்கை வரி?

சண்டே சர்ச்சை: திரைத்துறையைக் கட்டுப்படுத்தவா கேளிக்கை வரி?

கபிஷ் பாலகிருஷ்ணன்

என்னதான் ஆச்சு இந்தத் தமிழ் சினிமா உலகுக்கு? திரையரங்கம் ஸ்டிரைக், ஃபெப்சி தயாரிப்பாளர்கள் மோதலால் படப்பிடிப்பு ரத்து, திரைப்பட கூட்டமைப்புகளுக்கிடையில் மோதல், ஜி.எஸ்.டி. வரி என்று ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கித்தவிக்கும் நிலையில் தற்போது கேளிக்கை வரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27 முதல் தமிழகத்தில் வெளியாகும் புதிய தமிழ் படங்களுக்கு 10 சதவிகிதமும், பிறமொழி படங்களுக்கு 20 சதவிகிதமும் கேளிக்கை வரி வசூலிக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பழைய தமிழ்ப் படங்களுக்கு 7 சதவிகிதமும், பிறமொழி படங்களுக்கு 14 சதவிகிதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘ஒரு நாடு, ஒரு வரி’ என்று சொல்லி ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்திவிட்டு அதற்கு மேல் கேளிக்கை வரியை நிர்ணயிப்பது எந்த வகையில் நியாயம் என்று அரசின் இந்த வரி விதிப்புக்கு எதிராக திரைத்துறையினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கேளிக்கை வரி என்பது தயாரிப்பாளர்கள்மீது திணிக்கப்பட்டிருக்கும் சுமை என்று தயாரிப்பாளர்கள் கொந்தளிக்க, இந்த வரி விதிப்பு ஏற்புடையதல்ல; திரையரங்க டிக்கெட் கட்டணத்தை உயர்ந்துங்கள், இல்லையென்றால் திரையரங்கை மூடிவிடுவோம் என்ற திரையரங்க உரிமையாளர்கள் அறிக்கை விட, படத்தை உரிய நேரத்தில் வெளியிட முடியாமல் சிக்கித் திணறும் நிலையில் திரைத்துறைக்காக நஷ்டத்தை ஏற்கிறோம் என்று தியாக உள்ளத்தோடு சிறு படத் தயாரிப்பாளர்கள் பேச என்று இந்தக் கேளிக்கை வரி தமிழ்த் திரையுலகை ஆட்டம் காணச்செய்துள்ளது.

கேளிக்கை வரியும் பேச்சுவார்த்தையும்

திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன், 30 சதவிகிதம் கேளிக்கை வரியைத் தமிழக அரசு நிர்ணயித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாத காலமாக கேளிக்கை வரி குறித்து அரசும், திரைத்துறையினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேளிக்கை வரியை 10 சதவிகிதமாக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு சினிமாத்துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வட்டிக்குப் பணம் வாங்கி படம் எடுக்கும் நாங்கள் வருமானத்தில் 40 சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்திவிட்டு நஷ்டப்பட முடியாது என்று குரல் எழுப்பினர்.

“ஏற்கனவே திருட்டுத்தனமாகத் திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துவரும் நிலையில் 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்து தமிழ் திரைப்படத்துக்கும் மணி மண்டபம் கட்டிவிடாதீர்கள்” என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக்கொண்டார்.

ஒருபக்கம் ‘சினிமா திருட்டு’ தயாரிப்பாளர்களின் வருமானத்தை சூறையாடும் நிலையில் கேளிக்கை வரி என்பது திரைத்துறையினர் மீது வைக்கப்படும் பெரும் சுமையே என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. ‘மற்ற மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி மட்டும் இருக்கும் நிலையில், இங்கு மட்டும் கூடுதல் வரி இருப்பதற்கான காரணம் என்ன? திருட்டுத்தனமாக படம் வெளியாவதை 100 சதவிகிதம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என்று மாநில அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகள் எழத் தொடங்கின.

‘ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஜி.எஸ்.டி. வரியில் மாநிலங்களின் பங்கை தயாரிப்பாளர்களுக்கே கொடுத்துவிடும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. வரியோடு கேளிக்கை வரி என்ற ஒன்றை நிர்ணயிப்பது எந்த விதத்தில் நியாயம்?’ என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேளிக்கை வரி குறித்து மீண்டும் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த திரையுலகக் கூட்டமைப்புகள் முடிவெடுத்துள்ளன. அதற்காக, முதல்வரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்டுத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் சார்பில் தலைமைச் செயலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேளிக்கை வரியும் திரைத்துறையின் போராட்டமும்

ஜி.எஸ்.டி. வரி போக, தமிழக அரசு 30 சதவிகிதம் கேளிக்கை வரி விதித்ததால் கடந்த ஜூலை மாதம் திரையரங்க உரிமையாளர்கள் அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது வெளியான ‘இவன் தந்திரன்’ உட்பட ஐந்து படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. ‘தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையை, உடனே கழுத்தை அறுத்தால் என்ன வலி இருக்குமோ, அந்த வலியை உணர்கிறேன்’ என்று அப்போது கண்ணீருடன் தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்தார் ‘இவன் தந்திரன்’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.கண்ணன்.

இந்த நிலையில், சில தயாரிப்பாளர்கள் திரையரங்குகளை மூடி ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் வருமானத்தை முடக்குவது தவறு, புதிதாக வெளியாகும் படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவே சரியாக இருக்கும் அல்லது வேலைநிறுத்தம் குறித்து படம் வெளியாகும் முன்பாவது அறிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, தற்போது 10 சதவிகிதமாக கேளிக்கை வரியை நிர்ணயித்து அரசாணை வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டம் வெடித்தது. அக்டோபர் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்தது. அதே நாளில் ஏழு தமிழ்த் திரைப்படங்கள் வெளியாவதற்குத் தயாராக இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இதனால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ‘விழித்திரு’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மீரா கதிரவன், “திடீரென அறிவித்த ஸ்டிரைக்கால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. யாரோ ஆடுகிற சூதாட்டத்துக்கு யாரையோ பணயம் வைக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். “அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியகாததால் கடைசி 15 நாள்களாகப் படத்தைத் ‘தொலைக்காட்சி, பத்திரிகை, இணையதளம்’ போன்றவற்றில் விளம்பரம் செய்ய சுமார் 30 லட்சத்துக்கும் மேலாகச் செலவு செய்தும் படம் வெளியாகவில்லை. மீண்டும் விளம்பரத்துக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்ய வேண்டும். இது எங்களுக்குப் பெரும் நஷ்டம்தான்” என்று ‘உறுதிகொள்; படத்தின் தயாரிப்பாளர் அய்யனார் தெரிவித்தார்.

இந்த நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தால் 3 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமடைந்த ‘இவன் தந்திரன்’ படத்தின் முதல் மூன்று நாள்கள் திரையரங்க வருமானத்தில் திரையரங்கத்தின் பங்கு எதையும் எடுத்துக்கொள்ளாமல், முழுவதையும் படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் என்று ஆர்.கண்ணன் கூறுகிறார். திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஒவ்வொரு சிறு படத் தயாரிப்பாளரும் தங்களுக்கு தாங்களே ஆறுதல் படுத்திக்கொள்கின்றனர்.

கேளிக்கை வரியும் ரசிகனின் அவல நிலையும்

ஜி.எஸ்.டி. வரியோ, கேளிக்கை வரியோ எது அமல்படுத்தப்பட்டாலும் திரையரங்கக் கட்டணம் உயரும். இது சினிமா ரசிகர்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். திரையரங்குக்கு ரசிகர்கள் படம் பார்க்க வந்தால்தான் எத்தனை கோடிகளைக் கொட்டிப் படமெடுத்தாலும் அதைத் திரும்பப் பெற முடியும். அது எந்த அளவுக்குக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியே.

“முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை அனைத்துமே இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால், திரையரங்குகளின் டிக்கெட் விலையை மட்டும் ஏற்ற ஏன் அரசு இவ்வளவு தயக்கம் காட்டுகிறது எனத் தெரியவில்லை என்று பலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை நிர்ணயம் குறித்து அரசாணை ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் 25% வரை டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.150, குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. இதன்படி ரூ.150 (தமிழக அரசின் கேளிக்கை வரி சேர்த்து) + ஜி.எஸ்.டி (ரூ.42) = ரூ.192க்கு சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு அக்டோபர் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும், டிக்கெட் விலை போக இணைய வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.192 + ரூ.30 = ரூ.222 வசூலிக்கப்படும்.

“அரசின் இந்த அறிவிப்பால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தவிர்த்து மற்ற நகரங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே மற்ற நகரங்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்” என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறுகிறார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் சாமானியர்கள் கஷ்டப்படும் நிலையில், அவர்களின் பொழுதுபோக்குத்தளமாக இருந்த திரையரங்குகளுக்கும் தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, சினிமா ஆர்வலர் பிரகதீஷ், “வேலைப் பளுவால் எங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கவே வர இறுதி நாள்களில் திரைப்படங்கள் பார்க்கச் செல்கிறோம். அதன் விலையும் தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது வசூலிக்கப்படும் கட்டணமே எங்களுக்கு ஏற்றபடியாக உள்ளது. இதற்கு மேல் ஏற்றினால் திரையரங்கில் படம் பார்ப்பது குறித்து சற்று யோசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

திரைத்துறையைக் கட்டுப்படுத்தவா கேளிக்கை வரி?

திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி என்பது அரசின் வருமானத்தை அதிகரிக்கச்செய்யும் என்று கூறப்பட்டாலும் தற்போதைய அரசியல் சூழலில் சில நடிகர்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் கருத்துகளையும் வெளிப்படையாகப் பேசிவரும் நிலையில் திரைத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே இதுபோன்ற வரிவிதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து நடிகரும், சினிமா வரலாற்று ஆய்வாளருமான மோகன் ராம், “அரசு விதித்துள்ள இந்தக் கேளிக்கை வரி என்பது திரைத்துறையைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கான ஒரு முன்னெடுப்பே” என்கிறார்.

கடந்த ஆண்டு கேளிக்கை வரி மூலம் தோராயமாக ரூ.85 கோடி வரையில் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஜி.எஸ்.டி. வரியால் மட்டுமே அரசுக்கு 150 கோடி வரையில் வருமானம் கிடைக்கலாம் என்றும் கூறிய அவர், “கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்வதால் அரசுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட போவதில்லை” என்று கூறினார்.

இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது தமிழ்த் திரைத்துறை இப்போது பெரும் சிக்கலில் மூழ்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. திரைத்துறையின் கூக்குரல் அரசின் செவிகளுக்கு எட்டுமா, குழப்பத்தின் உச்சியில் தெளிவு பிறக்குமா என்பவை எல்லாம் இப்போது பதிலற்ற கேள்விகளாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றன என்பதே இன்றைய தமிழ்த் திரையுலகின் யதார்த்தம்.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon