மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

புவேர்ட்டோ ரிக்கோவுக்கு உதவும் எலான் மஸ்க்!

புவேர்ட்டோ ரிக்கோவுக்கு உதவும் எலான் மஸ்க்!

மரியா புயல் தாக்கியதன் காரணமாகச் சிதிலமடைந்து போயுள்ள புவேர்ட்டோ ரிக்கோ தீவின் மின்சாரக் கட்டமைப்பைச் சரி செய்ய, தான் தயாராக உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தீவுகளில் ஒன்றான புவேர்ட்டோ ரிக்கோவை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மரியா புயல் தாக்கியது. இதில், அத்தீவின் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் போன்றவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு வார காலமாக அத்தீவு மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். 10 சதவிகிதத்துக்குக் குறைவான பகுதிகளில் மட்டுமே மின்சார வசதியுள்ளது. இந்த நிலையில், புவேர்ட்டோ ரிக்கோ தீவுக்கு உதவ, தான் தயார் என்று டெஸ்லா நிறுவனத்தினர் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

சூரிய சக்தி மூலம் புவேர்ட்டோ ரிக்கோவின் மின் கட்டமைப்பைச் சரி செய்ய முடியும் என அவர் கூறியிருந்தார். இதையடுத்து, அவருடன் புவேர்ட்டோ ரிக்கோவின் ஆளுநர் ரிக்கார்டோ ரோசெல்லோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முதல்கட்ட பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, சூரிய பேனல்களை நிறுவுவதற்காக அனுபவம் மிக்கவர்களை அத்தீவுக்கு அனுப்பி வருவதாகவும் உள்ளூர் குழுவுக்குப் பயிற்சி அளித்து வருவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில், சூரிய ஒளியால் உருவாக்கப்பட்ட மின்சக்தியைச் சேமிக்கக்கூடிய பேட்டரிகளை அதிகளவு அத்தீவுக்கு அனுப்பி வைத்த மஸ்க், மேலும் உதவுவதற்காக, பேட்டரியின் உற்பத்தியையும் அதிகரித்துள்ளார்.

அத்தீவின் தொலைத்தொடர் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவத் தயாராக உள்ளதாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ப்பெட் தெரிவித்துள்ளது. இதற்கு அமெரிக்க பெடரல் தகவல் தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பலூன்கள் மூலம் தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்னரே பல பகுதிகளில் பலூன் மூலம் தொலைத்தொடர்பு சேவையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 8 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon