மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் மதுரையில் இன்று (அக் 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் 20 சதவிகிதம் வழங்க வேண்டும், ஊக்கத்தொகையை 5300ல் இருந்து 12,000 ஆக உயர்த்த வேண்டும், இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் விடுப்புத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக் 17ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனஸ் கோரி போராட்டம் அறிவித்தால் மட்டுமே வழங்கப்படுகிறது என்று அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

தீபாவளி முதல் நாளான அக் 17ஆம் தேதி இரவு 8 மணி முதல் 18ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக் 18 இரவு முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநிலப் பொதுச் செயலாளர் உலகநாதன், “தமிழக அரசும், ஜி.வி.கே. நெருக்கடி கால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையமும் (இ.எம்.ஆர்.ஐ.) எங்களிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படும். அப்போது அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானது. இந்தநிலையில் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்ப்பலி ஏற்படும். நோயாளிகள் இன்னலுக்கு ஆளாவார்கள் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

ஊதிய உயர்வு வழங்கியதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக் கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon