மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

சினிமா டிக்கெட் விலை: மேலும் உயர்த்த கோரிக்கை!

சினிமா டிக்கெட் விலை: மேலும் உயர்த்த கோரிக்கை!

கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்க டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு இன்று (அக்.07) அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய கட்டணம் வரும் திங்கள்கிழமை (அக்.09) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இதுவரையில் குறைந்த பட்சமாக ரூ.10 மற்றும் அதிகபட்சமாக ரூ.120 (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) வசூலித்து வந்தநிலையில் தற்போது தமிழக அரசு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி 25% வரை டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில்

டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ.150, குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு. இதன்படி ரூ.150 (தமிழக அரசின் கேளிக்கை வரி சேர்த்து)+ ஜிஎஸ்டி (ரூ.42)=ரூ.192 சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு அக்டோபர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும், டிக்கெட் விலை போக இணைய வழியாக டிக்கெட் ஒப்பந்தம் செய்யும் போது ரூ.192+ரூ.30=ரூ.222 வாங்குவார்கள்.

ஒரு ஸ்கிரீன் உள்ள திரையரங்குகளும் 25% வரை டிக்கெட் உயர்த்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதன்படி மாநகராட்சி, நகராட்சி என அனைத்துக்குமே ஒவ்வொரு விலையை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.50 வரையும் குறைந்தபட்சமாக ரூ.4 வரையும் டிக்கெட் விற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏனென்றால் தற்போது அனைத்து திரையரங்குகளில் ரூ.80 வரை டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கட்டண நிர்ணயம் குறித்து திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம், "இந்த புதிய கட்டணம் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தவிர்த்து மற்ற திரையரங்குகள் இயங்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. தற்போதைய கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் வரை அதிகமாக நிர்ணயித்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இப்போதே நாங்கள் அந்த விலைக்குத்தான் டிக்கெட் விற்றுக்கொண்டு இருக்கிறோம். அப்படி இருந்தும் நஷ்டத்தையே சந்தித்துவரும் நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக எதையும் கண்டுகொள்ளாத அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அவர்கள் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெளியாகும் புதிய தமிழ் படங்களுக்கு 10% கேளிக்கை வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கேளிக்கை வரி குறித்து தமிழக முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திரையுலக கூட்டமைப்புகள் முடிவெடுத்துள்ளன. அதற்காக, முதல்வரை சந்திப்பதற்க்கான நேரம் கேட்டு தலைமைச்செயலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய டிக்கெட் கட்டண அறிவிப்பும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இது குறித்தும் அந்த கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் சாமானியர்கள் கஷ்டப்படும் நிலையில், அவர்களின் பொழுதுபோக்கு தளமாக இருந்த திரையரங்குகளுக்கும் தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலையேற்றத்தை எதிர்த்து பொதுமக்கள் கோபமடையும் சமயத்தில், தியேட்டர் உரிமையாளர்கள் இது போதாது என்று கேட்கின்றனர். அரசாங்க உத்தரவுப்படி இதுவரையில் டிக்கெட் விலையை நிர்ணயிக்காததால், தற்போது அரசாங்கம் உயர்த்தியிருக்கும் விலைப்பட்டியல் தியேட்டர் உரிமையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. எனவே, மேலும் இந்த விலையை உயர்த்த கோரிக்கை வைக்கும் யோசனையில் இருக்கின்றனர்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon