மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

டூவீலர் வாங்கினால் ஆடு ஃப்ரீ!

டூவீலர் வாங்கினால் ஆடு ஃப்ரீ!

தீபாவளி சிறப்பு விற்பனையாக இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு ஆடு இலவசம் என்னும் சலுகை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொபைல் போன், டிவி, ஃபிரிட்ஜ், வாகனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய அனைத்து நிறுவனங்களும், வித்தியாசமான சலுகையை அறிவித்துப் பொதுமக்களை ஈர்த்துவருகின்றன.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள காயத்ரி மோட்டார்ஸ் என்னும் மோட்டார் சைக்கிள் முகவர் நிறுவனம் தங்களுடைய விற்பனையை அதிகப்படுத்த, அக்டோபர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இருசக்கர சாகனம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு இலவசமாக வழங்கப்படும் என புதன்கிழமை (அக்டோபர் 4) விளம்பரம் செய்தது.

ஏஜேன்சியின் உரிமையாளர் வெங்கடசாமி, “தங்கள் விற்பனையை அதிகப்படுத்த ஒவ்வொரு நிறுவனமும் புதிய முறையில் விளம்பரம் செய்கிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள ஹோண்டா விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு இலவசமாக சோபா செட் வழங்குகின்றனர். எனவே, நாங்களும் வித்தியாசமாக ஏதாவது பரிசு அளிக்கலாம் என முடிவு செய்தோம். எனவே, இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு இலவசமாக ஆடு வழங்கத் திட்டமிட்டோம். இந்த விளம்பரத்திற்குப் பின், தினமும் 100 பேராவது எங்களைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துவருகின்றனர். ஆனால், ஆடுகள் போதுமானதாக இல்லை. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டுள்ளோம்” எனக் கூறினார்.

ஆடுகளை மொத்தமாக வாங்குவதற்குக் கால அவகாசம் குறைவாக இருப்பதாலும், ஒரே நேரத்தில் ஆடுகளை வாங்குவது கடினம் என்பதாலும் வெங்கடசாமி இந்தத் திட்டத்தை முடக்கியுள்ளார். இருப்பினும், விற்பனையை அதிகரிக்க வேறோரு புதிய சலுகை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது உள்ள நிலையில் ஒரு ஆட்டை வாங்க 3000 ரூபாய்க்கு மேல் செலவாகும். அதுவும் மொத்தமாகக் கிடைப்பது சவாலானது. எனவே, வெங்கடசாமி இந்த முடிவைக் கைவிட்டுள்ளார். சலுகை அறிவித்த பகுதி கிராமம் என்பதால், மக்கள் ஆடுகளைப் பெற ஆர்வம் காட்டியுள்ளனர்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon