மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஸ்தம்பிக்கும் தமிழ் சினிமா: காப்பாற்றப்போவது யார்?

ஸ்தம்பிக்கும் தமிழ் சினிமா: காப்பாற்றப்போவது யார்?

மின்னம்பலம்

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அன்று நடைபெறவிருக்கும் படப்பிடிப்புகளை ரத்து செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நடிகர்கள் சங்கத்தின் 64ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மூத்த மற்றும் முன்னணி திரைப்பட, நாடக நடிகர் நடிகைகள் கலந்துகொள்ள நடிகர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 2016-2017ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெறுவது, எதிர்கால பொருளாதாரத் திட்டமிடல் பற்றிய விளக்க உரை, சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெறுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, நடிகர் நடிகைகள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வசதியாக அன்று ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு வேலைகளுக்கு விடுமுறை அளிக்க நடிகர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 08.10.2017 அன்று தாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஜி.எஸ்.டி. வரி, கேளிக்கை வரி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்களால் ஃபெப்ஸி போன்ற தொழிலாளர் சங்கங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. அதேசமயம் ஃபெப்சியின் டெக்னீஷியன் சங்கத்தால் ஏற்படும் பிரச்னைகளினாலும் திடீர் வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டுத் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமாகிறது. வரிவிதிப்பை எதிர்த்து அவ்வப்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் அவ்வப்போது தியேட்டர்களில் படங்களைத் திரையிடாமல் ஸ்டிரைக் செய்துவருவதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமாகிறது. இப்படித் தொடர்ந்து நடைபெறும் ஸ்டிரைக்குகளுக்கு இடையே நடைபெறும் நடிகர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் சங்கத்தில் நடைபெறப்போகும் பொதுக்குழுவினால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாது என்பதால், சோர்ந்து போயிருக்கும் தமிழ் சினிமாவுக்குப் புத்துணர்ச்சி அளிப்பது யார் என்ற கேள்வி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon