மின்னம்பலம்
தேமுதிகவினர், சமூக வலைதளங்களில் கட்சி நிர்வாகிகளையோ அல்லது தனிநபர்களையோ விமர்சனம் செய்ய வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடிகர் விஜயகாந்த், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் உடல்நிலை சரியானதை தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார். கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தினார். அதே போல நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடலுக்குக் கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று வேலூரிலிருந்து புறப்பட்டு அரியலூர் வந்து அஞ்சலி செலுத்தினார்.
காரைக்குடியில் கடந்த வாரம் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில், கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் எத்தகைய முடிவெடுக்கும் அதிகாரமும் விஜயகாந்துக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் விஜயகாந்த் நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிகவினர் இணையதளமான ஃபேஸ்புக் (FACEBOOK), ட்விட்டர் (TWITTER), இன்ஸ்டாகிராம் (INSTAGRAM), வாட்ஸ்அப் (WHATSAPP) உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தலைமை கழகத்தை பற்றியோ, நிர்வாகிகளை பற்றியோ, தனிப்பட்ட நபரை பற்றியோ, விமர்சனமோ, கேலி, கிண்டல் செய்வதையோ தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மீறி பதிவிடுபவர்கள், கழக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் தனித்தனியாக ஃபேஸ்புக்கில் குழுக்களாக அமைத்து செயல்படுவதை தவிர்க்க வேண்டும்” என்றும், தேமுதிகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் (Twitter account), DMDK SOCIAL MEDIA (@dmdksocialmedia - @dmdkparty2005) என்றும் குறிப்பிட்டுள்ளார்.