மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

குறைகிறதா ரயில் கட்டணம்?

குறைகிறதா ரயில் கட்டணம்?

ரயில்வே அமைச்சகம் ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில் புதிய டிக்கெட் கட்டண முறையைக் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

அதன்படி 10 சதவிகித இருக்கைகள் சாதாரனக் கட்டணத்திற்கு விற்கப்படும். அதன் பிறகு அடுத்த ஒவ்வொரு 10 சதவிகித பெர்த் டிக்கெட்டுகளுக்கும் 10 சதவிகித அளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வு 50 சதவிகிதத்துக்கு மேல் போகாது என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த முறையினால் தங்களுக்கு பாதிப்பு என்று பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பயணிகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் வருவாய் இலக்கை எட்ட அவர் முடிவு செய்தார்.

சார்ட் தயார் செய்த பிறகு காலியாக இருக்கும் ஒவ்வொரு சீட்டுக்கும் 10 சதவிகிதத் தள்ளுபடி கடந்த டிசம்பரில், அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ரயில்வே 2016 செப்டம்பர் முதல் 2017 ஜூன் வரை 540 கோடியை ஈட்டியது. மாறத்தக்க கட்டண முறையை இப்போது மறுபரிசீலனை செய்துவருகிறார்கள். சொகுசு ரயில்களின் கட்டணத்தைக் குறைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

வேகமான, திறமையான சேவைகளைப் பயணிகளுக்கு வழங்குவது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். நவம்பர் 1ஆம் தேதி முதல் 700 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 48 மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள், சூப்பர்ஃபாஸ்ட் / எக்ஸ்பிரஸ் ரயில்களாகத் தரம் உயர்த்தப்படும்” என ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

அக்டோபர் 1 முதல் நவம்பர் 1 வரையிலான காலகட்டத்தில் மும்பையில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon