மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

வரைவு வாக்காளர் பட்டியல்: பெண்களே அதிகம்!

வரைவு வாக்காளர் பட்டியல்: பெண்களே அதிகம்!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று (அக்.3) வெளியிட்டார். இதுபோல், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 95 லட்சத்து 88 ஆயிரத்து 2 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 492 பேர் ஆண்களாவர். 3 கோடியே 98 ஆயிரத்து 268 பேர் பெண்களாவர். அதாவது, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து13ஆயிரத்து 776 அதிகமாகும். திருநங்கைகள் 5 ஆயிரத்து, 242 பேர்.

தமிழகத்திலேயே பெரிய தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 86,24,405 . பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதியும் சோழிங்கநல்லூர்தான். மொத்தம். 3,10,542 பெண் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி கீழ்வேளூர் . இங்கு மொத்தம் 1,68,275 வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னையில் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். சென்னையில் மொத்தம் 40 லட்சத்து 70 ஆயிரத்து 703 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 86,344 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 20 லட்சத்து 13 ஆயிரத்து 168 பேர். பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியான வேளச்சேரியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி துறைமுகம். அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 102 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம், “வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளதா எனச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்தும், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ஐப் பூர்த்தி செய்தும் பட்டியலில் திருத்தம் செய்யப் படிவம் 8-ஐப் பூர்த்தி செய்தும் கொடுக்க வேண்டும்” என்றார்.

சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்து படிவம் 8ஏ-யைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். இது தவிர வருகிற 8 மற்றும் 22ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யலாம். www.elections.tn.Gov.in மற்றும் www.nasp.in ஆகிய வலைத்தளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon