மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்பு!

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்பு!

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனம் எழுந்த நிலையில், இந்தக் கொலை குறித்துத் துப்பு கிடைத்தாகக் கூறியிருக்கிறார் கர்நாடக காவல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரிக்கக் கர்நாடக அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைத்துள்ளது. அந்தக் குழு கொலையாளிகளைக் கண்டுபிடிக்கத் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது. புலனாய்வு குறித்துக் காவல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சிக்பள்ளாபூரில் நேற்று (2.19.2017) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“கவுரி லங்கேஷ் கொலை குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. இந்தச் சம்பவத்தில் காவல் துறைக்கு துப்பு கிடைத்துள்ளது. அதுபற்றி உங்களிடம் (செய்தியாளர்களிடம்) கூற முடியாது. இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை ஒன்று திரட்டும் பணி நடைபெற்றுவருகிறது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் அந்த வழக்கு குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும். அதனால் சரியான ஆவணங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.”

இவ்வாறு ராமலிங்க ரெட்டி கூறினார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon