மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

கொசுவைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய்!

கொசுவைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய்!

கொசுக்களைக் கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரிலுள்ள சித்த மருத்துவமனையில் நிலவேம்புக் கசாயம் வழங்கும் விழாவை இன்று (அக்டோபர் 03) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் காய்ச்சல் வந்தாலே உடனே மருத்துவரை அணுக வேண்டும். கால தாமதமாக வருவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் குணப்படுத்த கூடிய ஒன்று. பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை. காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் உடலில் தட்டணுக்கள் குறைந்தால் அதனை ஏற்றுவதற்கு அரசு மருத்துவமனைகளில் தட்டணுக்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது.

டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீரை சேமித்து வைத்திருக்கும் தொடர்புகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனை குடித்தால் டெங்கு பாதிப்பு ஏற்படாது. தற்போது வீடு வீடாக கொடுக்கும் வகையில் வாகனங்களில் நிலவேம்பு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

30 ஆட்டோ மற்றும் 5 ஜீப்புகளில் சென்னை நகரம் முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 2,000 கிலோ நிலவேம்புக் கசாயம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10.000 பேர் நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மூன்று நாள்களில் 50,000 பேருக்கு நிலவேம்புக் கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் ரூ.16 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழக் கிழமையும் கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படும். அரசு அலுவலகங்களில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon