மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

வங்கிச் செயல்பாடுகளில் இந்தி கட்டாயம்!

வங்கிச் செயல்பாடுகளில் இந்தி கட்டாயம்!

அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களின் மையச் செயல்பாடுகளை இந்தியில் மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில வங்கிகளின் ஏ.டி.எம்.களில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தி பயன்படுத்தப்படுகிறது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும், பல வங்கிகள் இன்னும் இந்தியை நீக்கவும் இல்லை, தமிழைப் பயன்படுத்தவும் இல்லை.

இந்நிலையில், வங்கித் துறையில் மொத்தமாக இந்தியைத் திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மைய வங்கி செயல்பாடுகளில் இந்தியைப் பயன்படுத்த அனைத்துப் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அலுவலக மொழித் துறையின் செயலாளரான பிரபாஸ் குமார் ஜா ‘தி இந்து’ இதழிடம் பேசுகையில், “வங்கிகள் தங்களின் தகவல் தளங்களை இந்தியில் மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் படிவங்களைப் பூர்த்தி செய்யும்படி வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது” என்று அவர் கூறினார்.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பலகைகளில் இந்தி மொழி பயன்படுத்தப்படாதவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா ஜூலை மாதத்தில் கடிதம் எழுதியிருந்தார். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிப்பதாகவும், இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற முயற்சிப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தி.மு.க. செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon