மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

எல்லைப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

எல்லைப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைப் படை முகாம் மீது பாகிஸ்தான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மற்றும் விமானப்படை தளம் அருகே எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் உள்ளது. இங்கு இன்று( அக்.3) அதிகாலை 3.45 மணியளவில் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவசர நடவடிக்கை குழு வீரர்கள் மற்றும் சிறப்புப் படையினர், தீவிரவாதிகளுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் சப் இன்ஸ்பெக்டர் பிகே யாதவ் என்பவர் மரணமடைந்தார். சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில்,3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒருவர் உள்ளே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மறைந்திருக்கும் தீவிரவாதியை பிடிப்பதற்கான இறுதிக்கட்ட தாக்குதலில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் அந்த முகாம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அருகில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. காலையில் செல்லவேண்டிய அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன. பின்னர் சில மணி நேரங்கள் கழித்து விமானச் சேவை மீண்டும் தொடங்கியது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பல அடுக்கு பாதுகாப்புகளையும் மீறி எல்லைப் பாதுகாப்பு முகாமிற்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளது தொடர்பாக உள்துறை அமைச்சகமும் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கூடவுள்ளது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon