மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம்!

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம்!

இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று (அக்.03) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 27ஆம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, தமிழ்ப் படங்கள் 10 சதவீதமும், பிற மொழித் திரைப்படங்கள் 20 சதவீதமும் கேளிக்கை வரியாகச் செலுத்த வேண்டும். இதனையடுத்து சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இது குறித்து இந்திய மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் தீபக் அஷர், "ஒரு நாடு, ஒரு வரி என்று ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியானது, திரைத் துறையைப் பெரிதும் பாதிக்கும். அதிகப்படியான வரி, திருட்டுத்தனமாகப் படம் வெளியாவது எனத் திரைத் துறை அழிவுநிலையில் உள்ளது. இந்நிலையில், கேளிக்கை வரியால் பெருமளவு பாதிப்பு ஏற்படும். அதுவும், பிற மொழிப் படங்களைத் திரையிடும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் பெருமளவில் பாதிப்படையும் என்பதால், இன்று முதல் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், ஐநாக்ஸ், பிவிஆர் ஆகிய திரையரங்குகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இந்தத் திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத சத்யம், மாயாஜால், லக்ஸ் போன்ற மல்ட்டிபிளக்ஸ்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் உள்ள மற்ற திரையரங்குகளின் முடிவு புதன்கிழமை நடைபெறவுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தெரியவரும்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon