மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

மஹிமா: தைரியமான கிராமத்துப் பெண்!

மஹிமா: தைரியமான கிராமத்துப் பெண்!

நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வுசெய்து நடித்துவரும் மஹிமா நம்பியாருக்குத் தற்போது கிராமத்துப் பெண் கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. அட்டகத்தி தினேஷுடன் இவர் இணைந்து நடித்த அண்ணனுக்கு ஜே படம் இன்னும் இரு மாதங்களில் வெளியாகவுள்ளது.

இதில் பணியாற்றிய அனுபவம் குறித்து டெக்கான் க்ரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார். “இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. விரைவில் படம் வெளியாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளேன். மிகவும் தைரியமான அந்தப் பெண் உள்ளூர் இசைக்குழுவைச் சேர்ந்தவள். படம் முழுக்க வரும் எனது கதாபாத்திரம் தினேஷுடன் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். எனது திரைப்பயணத்தில் எப்போதும் இது முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும்.”

இயக்குநர் ராஜ்குமார் தன்னை சுதந்திரமாக இயங்க வைத்ததாகக் கூறும் மஹிமா, “இயக்குநர்கள் சொல்வதை மட்டுமே இதுவரை செய்துவந்தேன், ஆனால் இதில் நான் சுதந்திரமாக நடிக்கவும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற கற்றுக்கொள்ளவும் இயக்குநர் ராஜ்குமார் இடமளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிக்குமார் நடிக்கும் கொடிவீரன் படத்திலும் கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் மஹிமா, “கொடிவீரன் படத்தில் எனக்கு, தனது அபிப்ராயத்தை துணிந்து சொல்லும் கதாபாத்திரம். டப்பிங் நான் பேசவில்லை, இருப்பினும் லிப் சிங்க் சரியாக இருக்கவேண்டும் என இயக்குநர் முத்தையா கூறினார் எனவே சரியான வசன உச்சரிப்புக்காக மதுரை வட்டார வழக்கைக் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

மஹிமா தற்போது ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன், அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள், மம்முட்டியின் மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon