மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

எழுத்தாளர்கள் கைது: தமுஎகச கண்டனம்!

எழுத்தாளர்கள் கைது: தமுஎகச கண்டனம்!

கௌரி லங்கேஷ் படுகொலைக்கு நீதி கோரும் முழக்கங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிக்கை ஒன்றைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக். 2) காந்தி சிலைக்கு ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு கூடிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் கௌரி லங்கேஷ் படுகொலைக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்பினர். இதைக் காவல் துறையினர் தடுத்தனர். அறிவிப்புகள் வைக்கக் கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்று கெடுபிடி செய்தனர். ஜனநாயக உரிமையை மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என்று கூறிய செயல்பாட்டாளர்கள், சிலை அருகே அமர்ந்து ‘காந்தியைக் கொன்றவர்களே கௌரி லங்கேஷையும் கொன்றார்கள்’ என்று முழக்கமிட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். பின்னர் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள வள்ளுவன் வாசுகி திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். எழுத்தாளர்கள் வீ. அரசு, வ. கீதா, அ.மங்கை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் கைது செய்யபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தகவல் கிடைத்து இவர்களைக் காண வந்தவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். யாரையும் பார்க்க அனுமதி இல்லை என்றனர். அதைத் தொடர்ந்து அங்கேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், “கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல், மற்றவர்களை எச்சரிக்கிற மிரட்டலுமாகும்” என்று விமர்சித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்று உண்மைளைச் சொல்லக் கூடாது என்று தடுக்க சங் பரிவார அமைப்புகள் நாடு முழுவதும் பல முயற்சிகளைச் செய்துவருகின்றன. தமிழக அதிமுக அரசோ, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல, மத்திய ஆட்சியாளர்களுடன் இணக்கமாகச் செல்வதற்காக இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளில் ஈடுபடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, "மதவெறியை எதிர்த்துப் போராடி, மக்கள் நல்லிணக்கத்திற்காக உயிர் நீத்தார் காந்தி என்பது வரலாற்று உண்மை. அவரது பிறந்தநாளில் சிலை அருகில் கூடியவர்கள், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மையோடு சேர்த்து இன்றைய கருத்துரிமை ஒடுக்குமுறை நிலைமை குறித்தும் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறார்கள். இதை ஒரு பெரிய குற்றச்செயலாகக் கூறி, முழக்கமிடுவதற்குத் தடை விதித்ததும், அவர்களை அப்புறப்படுத்திக் கைது செய்ததும் இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும்.முழக்கமிடுவதில் பங்கேற்றவர்கள் சமூகப் பொறுப்புடன் அறிவுத்தளத்தில் செயல்படுகிற எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களுமாவர். நாட்டின் பன்முகப் பண்பாட்டு மரபைப் பாதுகாக்கும் முனைப்புடன் அவர்கள் எழுப்பிய முழக்கம் நியாயமானது. காவல் துறையின் இந்த நடவடிக்கை மூலம் ஆர்எஸ்எஸ்-பாஜக திட்டங்களுக்குத் தனது ஒத்துழைப்பை அதிமுக அரசு காட்டிக்கொள்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது" என்றதோடு,

“ஜனநாயக உரிமைக்காகக் குரல் எழுப்பியோருடன் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. கைது-வழக்கு நடவடிக்கையை அரசு விலக்கிக்கொண்டு, கருத்து வெளிப்பாட்டு உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள இயக்கங்கள் ஒரே குரலாக இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon